மனிதன் தன்னைத் தானே சரிப்படுத்தி கொள்வதன் அடிபடையில் தான் எல்லா முன்னேற்றங்களும் நல்ஒழுக்கங்களும் அடங்கியிருக்கின்றன என்று கன்பூஷியஸ் கூறுகிறார். அவரின் இந்த எளிமையான, நேரான, பின்பற்றக்கூடிய அறிவுரை ஆழமான மெய்யுரை. உலகின் துன்பத்தைக் குறைப்பதற்குத் தன்னை ஒழுங்குபடுத்தி கொள்வதை விட சிறந்த வழி கிடையாது. தன்னைச் சீர்படுத்திக் கொள்வதை விட மெய்யறிவிற்கு இட்டுச் செல்லும் நேர் வழி வேறு கிடையாது. தன் தவறுகளைத் திருத்திக் கொள்வதை விட தலையாய பணி எதுவும் கிடையாது, உயர்ந்த அறிவியல் விஞ்ஞானமும் கிடையாது. எவன் ஒருவன் தன் குற்றம், குறை, தவறுகளை அறிந்து உணர்ந்து அவற்றை நீக்கும் முறையை கற்றுக்கொள்கின்றானோ, உள்ளம் மாசின்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்று விழித்திருக்கின்றானோ, அலைபாய்ந்து கொண்டிருக்காத சாந்தமான மனதை, ஆழ்ந்து நோக்கி காணும் அறிவான மனதை அடைய நினைக்கின்றானோ, அவன் மனிதனால் ஏற்க முடிந்து ஈடுபடக்கூடிய மிக உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கின்றான். அதன் விளைவாக அவன் வாழ்வு பேரருளும் பேரழகும் நிறைந்து ஓர் ஒழுங்குடன் விளங்கும்.
Be the first to rate this book.