உடலில் ஒரு வலி வந்தவுடனேயே உயிர் பயம் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். அப்பா, அம்மாவுக்கு ஏதாவதொன்றால் அதைவிடக் கவலை தொற்றிக்கொள்கிறது. மருத்துவத்தையும் டாக்டர்களையும் அந்த அளவுக்கு நாம் மதிக்கிறோம். மருத்துவத்தை எவ்வாறு அணுக வேண்டும், கண்ட மருந்துகளைச் சாப்பிடாமல் இருப்பது எப்படி. தொட்டதெற்கெல்லாம் டாக்டரிடம் போகாமல் ஓரளவுக்கு நமக்கு நாமே சமாளித்துக்கொள்ள என்ன வழி போன்றவற்றை இந்த நூலில் வழி சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் ஹெக்டே.
தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் இருக்கும் குறைகளை வெளியே சொல்ல அனேகர் தயங்குவார்கள்; தவிர்த்துவிடுவார்கள். ஆனால், ‘பெரும்பாலான மருத்துவர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தேவையில்லாத அறுவை சிகிச்சையைச் செய்யச் சொல்லி மூளைச் சலவை செய்துவிடுகிறார்கள். பயந்துபோகும் நோயாளிகள் அதற்கு அடி பணிகிறார்கள்’ என்று சாடுகிறார். கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவ உலகம் பயமுறுத்துகிறது. அனேக எண்ணெய்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று புதிய தத்துவம் ஒன்றை முன்னே வைக்கிறார். பெண்கள் மெனோபாஸ் சமயத்தில் மனக் குழப்பம் உண்டாகும்; அதனால் சிறிது ரத்த அழுத்தம்கூட உண்டாகும். ஆனால், மருத்துவர்கள் மேலோட்டமாக இதற்கு ரத்த அழுத்தத்துக்கான மருந்துவத்தையே செய்கின்றனர். அது மேலும் அவர்களுக்கு அவஸ்தையைத்தான் உண்டாக்கும். அவர்கள் மருத்துவரை மாற்றுகிறார்கள் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார். ‘எல்லா மருத்துவர்களுமே இவ்வாறுதான் என்று சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் இருப்பதைப் போலவே அபூர்வமாக சத்தியமான பணம் சம்பாதிப்பதை ஓரம் தள்ளி, நோயாளியின் நலன் ஒன்றே நோக்கம் என்ற மருத்துவர்களும் இருக்கிறார்கள்’ என்கிறார்.
வீணான பயத்தைப் போக்கிக்கொண்டு, இயற்கையாகவே நோய்களை உடல் எதிர்க்க வழி செய்துகொண்டு, அது மிஞ்சிப் போகும்போது மருத்துவரை நாடுவது நல்லது என்ற அறிவுரை வியக்கவைக்கிறது. How to Maintain Good Health என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. எளிய தமிழில் எல்லோர்க்கும் புரியும்படி தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
Be the first to rate this book.