'சதயம்' என்கிற மிகத் தீவிரமான படம் ஓன்று உண்டு. எம்.டி தான் எழுதினார் இதற்கும். எப்படி 'தனியாவர்த்தனம்' என்கிற படம் மறுபடி ஒருமுறை பார்க்க முடியாதோ, இந்தப் படமும் அப்படித்தான். தூக்கு தண்டனைக் கைதியாக லால். தூக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற ஆர்டர் அவரிடம் கொடுக்கப்பட்டதும் லால் என்ன செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் எம்.டி திகைத்ததைப் பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி சுகா எப்போதும் சிலாகித்ததுண்டு. அவர் என்ன செய்கிறார் என்பதை இப்போதும் என்னால் கூற முடியவில்லை. கண்களில் நீர் நிரம்ப ஒவ்வொரு முறையும் உறைந்திருக்கிறேன். இனிமேயும் யாராவது பார்க்கலாம், அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய முடிந்தால் அதைப் பற்றி எழுதலாம்.
வந்த புதிதில் ஒரு வரிசையில் லாலின் முகம் வளைய வந்திருந்தது போல வேறு ஒரு வரிசை துவங்கிற்று. அது மலையாளத்துக்கு கிட்டின பொக்கிஷமான லோகிதா தாசும் சிபி மலையில் மற்றும் வேறு பல இயக்குநர்களும் இயங்கினவை. அடேங்கப்பா. வரிசையாய் வந்தவாறு இருந்த அந்தப் படங்களுக்கு மக்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். கிரீடம், தசரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தனம், பரதம், செங்கோல் என்று படங்கள். இவற்றில் எல்லாமே வாழ்க்கை இயங்கியது. கொப்பளிக்கிற உணர்ச்சிகளைக் கையாண்டார்கள். மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் வாழ்வு நடத்துகிற போரில் அவர்கள் மனிதர்களாக தன்னை நிதானிப்பதைப் பல கோணங்களில் சொல்லப்பட்தற்கு லால் போன்ற நடிகர்கள் இருந்தது ஒரு காரணம்.
Be the first to rate this book.