நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலேயே பல்வேறு ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. சமூக நலன் சார்ந்து சிந்திக்கவேண்டிய, செயல்படவேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன் என்கிறார் சவுக்கு சங்கர்.
அதற்குப் பிறகு நடந்தது அனைவருக்கும் தெரியும். சங்கர் கட்டம் கட்டப்பட்டார். அவர்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. அதிகார வர்க்கம் அவரைத் தீவிரமாக வேட்டையாடத் தொடங்கியது. வேலை பறிக்கப்பட்டது. காவல் துறையினரால் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார். உடல், உள்ளம் இரண்டையும் வதைக்கும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன.
ஒரு சாமானியன் அதிகாரவர்க்கத்துக்கு எதிராக
மேற்கொண்ட அசாதாரணமான போராட்டமே 'ஊழல்-உளவு-அரசியல்'. சவுக்கு சங்கரின் வாழ்க்கை, போராட்டம் இரண்டும் (அல்லது ஒன்றுதானா?) விரிவாகவும் நேரடியாகவும் இதில் பதிவாகியிருக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றின் சர்ச்சைக்குரிய பல பக்கங்களும் இதில் இருக்கின்றன. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு முக்கியமான புத்தகம்.
5 review
‘ அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ” என்ற அட்டைப்பட கட்டியத்துடன் தற்போது ” ஊழல் – உளவு – அரசியல் ” என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. சவுக்கு என்ற இணைய தளத்தை நடத்திவரும் சங்கர் என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியபோது அதிகார வர்க்கத்தின் ஊழலை எதிர்த்ததால் சிறை சென்று, வேலை நீக்கம் செய்யப்பட்டு வழக்குகளை எதிர் கொண்டவர். அவருடைய தன் வரலாறுதான் இந்த நூல். கதை போல இந்த நூலின் ஓட்டம் இருக்கிறது. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளன் எழுதுவது போல சாதாரண வார்த்தைகளில் சுவைபட தன் அனுபவங்களை எழுதியுள்ளார். இந்த நூலை எடுத்தால் கீழே வைக்க முடியாது. இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் அதிகம் விற்பனையான நூட்களின் பட்டியலில் இது மூன்றாவது இடம் பெற்றுள்ளது என்கிறது தமிழ் இந்து நாளிதழ். பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என இதைப் படிக்கும் ஒவ்வொருக்கும் இதில் ஏதோ ஒரு செய்தி கண்டிப்பாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீடு மூலம் இடம் ஒதுக்குவதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது பலருக்கு நினைவு இருக்கலாம். இதன் சூத்திரதாரி சங்கர் என்கிறது இந்த நூல். ஜெயலலிதா (பாராளுமன்ற உறுப்பினராக இருக்கையில்), வளர்மதி, செங்கோட்டையன் ஆகியோருக்கு எதிராக இருந்த வழக்கு நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்புத் துறை கைவிட்டது. அதற்கு ‘ பரிசாக’ ராதாகிருஷ்ணன், நரேந்திரபால் சிங் என்ற ஐ.ஜிக்களின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது என்கிறார் சங்கர்.இதற்காக தன் நண்பன் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு , மேல்முறையீட்டு ஆணை ( ராமகிருஷ்ணன்) அதன் தொடர்ச்சியாக பேரா.கல்யாணி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு என தொடர்ச்சியாக சம்பவங்கள் நடக்கின்றன. ஊழலை எதிர்த்த தன் பயணத்தில் பத்திரிக்கையாளர்களை ( டெக்கான் கிரானிகள் அருண், ஜூ.விகடன் வெங்கடேஷ் , தெகல்கா வினோஜ், மக்கள் தொலைக்காட்சி ரவி), நேர்மையான அதிகாரிகளை ( எஸ்.கே.உபாத்யாய்) நினைவு கூறுகிறார். தன் உறவினர் மீதான லஞ்ச புகார் மீதான நடவடிக்கையைக் கைவிடக்கோரி லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் திமுக அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து பதவி இழக்கிறார். அதனை விசாரிக்க அமைக்கப்பட்ட சண்முகம் ஆணையத்தின் சந்தேக வளையத்திற்குள் சங்கர் வருகிறார்.அதில் அவருடைய பை கைப்பற்றப்படுகிறது.அதில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட வேண்டிய ஆவணங்கள் இருக்கின்றன. எனவே “ஜோடிக்கப்படுகிறார்”; தளைப்படுத்தப்படுகிறார்; வேலைநீக்கம் செய்யப்படுகிறார்; ஏழு ஆண்டுகள் வழக்கை எதிர் கொள்கிறார். விசாரணையின்போது ‘ நீதி வழுவாத’ நீதிபதிகளை எதிர்கொள்கிறார்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைத் தொகை கட்டுகிறார்; உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பற்றி எழுதுகிறார்; ஒன்றரை ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் இந்த 200 பக்க நூல். இரண்டு மாதம் புழல் சிறையில் இருக்கிறார். அந்த அனுபவங்கள் இந்த நூலின் பக்கங்களில் கணிசமாக விவரிக்கப்பட்டுள்ளன. சிறையில் பீடிதான் கரன்சி ; கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் சிறைத்துறை சீர்திருத்தங்கள் நடந்தன ( மின் விசிறி வந்தது அப்போதுதான்); ஒரு ஊழல் வழக்கில் கூட திமுக அமைச்சர்கள் யாரும் தண்டிக்கப்படும் வகையில் ஜெயலலிதா உழைத்தது இல்லை;த ன்னைத் தேடி வரும் அதிகாரிகள் மீதான வழக்குகளைக் கைவிட்ட திலகவதி; நமது எம்ஜிஆர் நாஞ்சில் குமரன்; தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள்; தன் இளமைக் காலத்தையும் ,வாழ்க்கையையும் சிறையிலேயே கழித்த ‘தடா’ ரஹீம் என பல அரசியல் , சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை இந்நூல் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ‘அரசு இயந்திரம் பழி வாங்குகையில் அவனுக்கு உதவுவது நமது கடமை என்று அவர்கள் கருதுகிறார்கள். அவன் அழிந்து போகக் கூடாது என்று விரும்புகிறார்கள். அதனால்தான் என்னால் முதலைகள் நிறைந்த குளத்தில் நீந்தி கரைசேர முடிந்தது’ என்கிறார்.’ காலச் சக்கிரத்தை பின்னோக்கி சுழற்றினால் நான் இதை மீண்டும் செய்வேனா என்றால் நிச்சயம் செய்வேன் ‘ என்று கூறி முடிக்கிறார் இந்த தீரமிக்க எழுத்தாளர் .இது ஒரு முக்கியமான நூல் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கிழக்குப் பதிப்பகம் /224 பக்கம் /ரூ.200. பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.// courtesy; thetimestamil.com
peter durairaj 23-02-2018 03:55 pm
5
Dhanapal 01-02-2018 05:51 pm
5 Must Read
I just love this book. If you want to know how government offices,prison and judicial system works then you should read this.
Gopinath Dhanapal 29-01-2018 09:21 am