முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.
அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.
எடி ஜேக்கூவின் இயற்பெயர் ஆபிரகாம் சாலமன் ஜேக்கூபோவிச். அவர் 1920 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரில், நாஜிக்களின் பூக்கென்வால்டு வதை முகாமிலும் ஆஷ்விட்ஸ் வதை முகாமிலும் அவர் அடைக்கப்பட்டார். 1945 ஆம் ஆண்டில், வதை முகாம் கைதிகள் கொடூரமாக மைல் கணக்கில் நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட ‘மரணப் பேரணி’யிலும் அவரும் இடம்பெற்றார். 1950 ஆம் ஆண்டில், அவர் தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தார். 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட சிட்னி யூத அருங்காட்சியகத்தில், தொடக்கத்திலிருந்தே அவர் தன்னார்வத் தொண்டாற்றி வருகிறார். அவரும் அவருடைய மனைவி ஃபுளோரும் எழுபத்து நான்கு ஆண்டுகளாக மகிழ்ச்சியான தம்பதியராக வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும், பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டில், எடி தன்னுடைய நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது அவர் தன் குடும்பத்துடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார்.
Be the first to rate this book.