தினத்தந்தி நாளிதழில் ஞாயிறுதோறும் வெளிவரும் குடும்ப மலரில் டாக்டர் எஸ்.அமுதகுமார் 100 வாரங்கள் எழுதிய உடலும் உணவும் என்ற மருத்துவக் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல். நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. அதனால் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தார்கள். அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகளில் எது சிறந்தது; உடல் நலம் பேண எவ்வளவு தண்ணீர் தேவை; கோதுமை உணவு, அரிசி உணவு இவற்றில் எது நல்லது என்பன போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு எளிமையான முறையில் அரிய தகவல்களை தருகிறார். காலை உணவின் அவசியம், வைட்டமின்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சினைகள், எந்த எண்ணெய் நல்லது, தசைப் பிடிப்பின் காரணங்கள், இதயம் பற்றிய எச்சரிக்கை, பற்களின் பாதுகாப்பு, சாப்பிட்டவுடன் தூங்குவதால் நெஞ்செரிச்சல் என உடல் பற்றிய கலைக்களஞ்சியமாக இந்த நூல் காணப்படுகிறது.
சரிவிகித சத்துணவு, நார் சத்து நிரம்பிய உணவுகள், ரத்தசோகை, கேழ்வரகின் மகத்துவம், ரத்தக் கொதிப்பு, பூண்டு&ஓர் அருமருந்து, மலச்சிக்கல், சருமப் பாதுகாப்பு, குழந்தையின்மை போன்ற 60 தலைப்புகளில் நாம் அவசியம் அறிந்து கொண்டு செயல்படுத்தக்க்கூடிய நுட்பமான செய்திகள் அடங்கியுள்ளன. மருத்துவத் தகவல்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமலும் வழங்குகிறார். இதில் இல்லாத மருத்துவ செய்திகள் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை கருத்துகளையும் கொடுத்துள்ளார். சரியான உணவுகளைச் சாப்பிட்டு முறையாக உடலைப் பேணுவதற்கான வழிகாட்டி இந்த நூல் என்றால் அது மிகையல்ல.
டாக்டர் எஸ். அமுதகுமார்
நெல்லை மாவட்டத்துக்குச் சொந்தக்காரரான டாக்டர் எஸ்.அமுதகுமார், பல முக்கிய பிரமுகர்களின் மருத்துவ ஆலோசகராக இருந்து வருகிறார். 'வி.ஐ.பி.க்களின் டாக்டர்' என்று கூட இவரை அழைப்பதுண்டு. எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்களைப் போன்று, மருத்துவமும், எழுத்தும் இவரின் சுவாசமாகவே இருந்து வருகிறது. எழுத்து இவருக்கு இன்றுதான் கைவசப்பட்டது என்றில்லை. மருத்துவம் பயிலும் மாணவராக இருந்தபோதே, இவர் மருத்துவத்துறையில் பல்வேறு பிரிவு மேதைகளை, மருத்துவக் கட்டுரைகள், பேட்டிகள், சிறப்புப் பேட்டிகள், அட்டைப்பட மருத்துவக் கட்டுரைகள் மூலமாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்று வார, மாத, தினசரி இதழ்களில் மருத்துவம் சார்ந்த பகுதிகள் வருகிறதென்றால், அதற்கு இவரே முன்னோடி.
இதுவரையில் ஐந்து மருத்துவப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் முதலியவைகளில் நூற்றுக்கணக்கான மருத்துவ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார். தோன்றியுள்ளார். எல்லாவற்றையும் விட, இவர் ஒரு சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, மனிதநேயரும் கூட.
Be the first to rate this book.