கடந்த 1996-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து அதிரடியாக ‘ஆகஸ்ட் புரட்சி’ ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம். புதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய பகுதிகளை ஆரம்பிக்கலாம் என ஆசிரியர் இலாகாவினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது அனைவரும் ஏகமனதாக தெரிவித்த ஒரு கருத்து ‘விகடனில் மருத்துவக் கட்டுரைகள் இடம் பெற வேண்டும்’ என்பதுதான். தலையிலிருந்து பாதம் வரையில் ஒவ்வொரு அங்கமாக எழுதச் சொல்லலாம் என்ற எண்ணம் வர, உடனே ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’ என்ற அழகான தலைப்பு கிடைத்தது.
இந்த ஐடியாவை அந்தந்த துறையில் சிறந்து விளங்கும் பிரபலமான மருத்துவ நிபுணர்களிடம் விளக்கினோம். அவர்களுக்கும் இந்த எண்ணம் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிவிட உடனே அக்கறையுடன் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். தலை, தோல், தோல் பராமரிப்பு, வயிறு, கண் மற்றும் ஜனனத் தொழிற்சாலை என ஒரு ‘ரிலே தொடர்’ எழுதிக் குவித்தார்கள். பிஸியான மருத்துவப் பணிக்கு இடையிலும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிய - டாக்டர் கே.லோகமுத்துகிருஷ்ணன், டாக்டர் எம்.நடராஜன், டாக்டர் கே.ராமச்சந்திரன், டாக்டர் கர்னல் எஸ்.கிருஷ்ணன், டாக்டர் ரஜினிகாந்தா, டாக்டர் பிரேமா கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றாட வாழ்க்கையில் உடல் நலம் பற்றிய பிரச்னைகள், மற்றும் சந்தேகங்களை நீக்கும் வகையில் எளிமையான நடைமுறையில் எழுதப்பட்ட இந்த ரிலே தொடரைப் பாராட்டி வாசகர்களிடமிருந்து வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களே இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தன. விகடனின் எந்த புதிய முயற்சி என்றாலும் எப்போதும் ஆர்வத்தோடு என்னை உற்சாகப்படுத்தும் வாசகர்களின் இல்லங்களில் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
Be the first to rate this book.