"ஷேர் மார்க்கெட்டா? அதுல அதிகமா பணம் பண்ணலாமே... நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்..." என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல... பங்கு வர்த்தகம்.
இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டியதும் வழிமுறைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாளுவதும் மிக மிக முக்கியம்... காரணம் இதற்கான கால நேரம் மிகவும் குறுகியது. முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக்கூடிய மன வலிமை வேண்டும்... இல்லாவிட்டால் டிரேடிங் பண்ணி பொருட்களை வாங்கி விற்பதில் பண இழப்பு அதிகமாவதோடு, விட்டதைப் பிடிக்க மீண்டும் மீண்டும் டிரேட் செய்து மொத்தத்தையும் இழந்து வெளியேறுவதில் உடல் வலி, மனச்சோர்வுதான் மிச்சமாகும். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். டிரெண்ட் மாறும்போது அதற்கேற்ப டிரேடிங் முறைகளை மாற்றுபவர்கள் வெற்றிபெறும் டிரேடர்களாக முடியும் என்று டிரேட் செய்கிறவர்களுக்கு கருத்தாய் பாடம் கற்பிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும்.
தங்கள் வரவு, செலவு கணக்கு, மீதம் உள்ள பணம், மற்றும் டிவியில் உள்ள ஷேர் விவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்களின் நுணுக்கங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தங்களை அப்டேட் செய்துகொள்பவர்களே சிறந்த டிரேடர்கள். ‘டிரேடர்களே உஷார்’ எனும் தலைப்பில் நாணயம் விகடனில் வெளிவந்து டிரேடர்களை உஷார்படுத்திய தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும், வழிகாட்டும், இந்த நூல்!
Be the first to rate this book.