கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும்.
ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசித்திருந்த பின்னணியில் அந்தத் தெருவைக் கடக்கும் போது மிகப்பெரிய வரலாற்றைக் கடக்கும் உணர்வு ஏற்பட்டது. தெற்குக் கடைவீதியின் தேநீரை ஒரு கையிலும் சிகரெட்டை மறுகையிலும் வைத்தபடி, மிசனரி கால்டுவெல் பற்றி தொ.ப. பேசுவதை பிரமிப்புடன் கேட்ட நாளை மறக்கவே முடியாது.
மழைபெய்த இரவின் நாளில் டேவிட் பாக்கியமுத்து - சரோஜினி பாக்கியமுத்து தம்பதியர் கிளாரிந்தாவைப் பற்றி சொன்ன கதைகள் ஏராளம் ஏராளம். பாளையங்கோட்டை கல்லூரி மாணவன் லூர்துநாதன் சிலையின் வரலாறு பலரும் அறியாத ஒன்றே.
கொக்கிரகுளம் ஆற்றின் எதிரே உள்ள தைப்பூச மண்டபத்தின் சிறப்பைப் பற்றி தொ.மு.சி.ரகுநாதன் சொல்லித்தான் தெரியும். கிருஷ்ணபுரம் கோவில் சிற்பங்களின் மகத்துவம் பற்றி ஓவியர் இசக்கி அண்ணாச்சி மணிக்கணக்கில் பேசுவதை வாய்பிளந்து கேட்ட அனுபவம் உண்டு. நெல்லையின் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு வரலாறு இருப்பதை அனுபவத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.
Be the first to rate this book.