மருத்துவம் படித்தால்தான் வைத்திய ஆலோசனை சொல்ல முடியும். பொறியியல் படித்தால்தான், கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை சொல்ல முடியும். ஆனால், அனுபவப் படிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு இல்லத்தரசிகளாலும் ஆலோசனை சொல்ல முடியும். அதுதான் 'டிப்ஸ்'. காலையில் எழுந்தவுடன் டூத் பிரஷ்ஷை ஸ்டாண்டில் இருந்து எடுப்பது முதல் இரவு படுக்கையறை செல்வது வரை இல்லத்தரசிகள் சந்திக்கும் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்னைகளை, அனுபவங்கள் காரணமாக எளிதில் சமாளிக்கவும் கற்றுத் தேர்கிறார்கள்.
இந்த வகையில், நாங்கள் கண்டுபிடித்த(!) சமாளிப்பு முறைகளை 'அவள் விகடன்' இதழ் ஆரம்பித்த நாள் முதலே 'டிப்ஸ்'களாக வாசகிகள் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். இதைப் படிக்க நேரும் மற்ற வாசகியரும், 'அட... சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்துத் தலைக்குத் தேய்த்தால், பேன் தொல்லை வரவே வராதாமே!' என்று வியந்து, அடுத்த முறை தங்கள் வீட்டில் அமல்படுத்தியும் விடுகிறார்கள். அழகு, ஆரோக்கியம் மட்டுமல்ல... வீட்டுப் பராமரிப்பு, சமையல் என டிப்ஸ்களின் ராஜாங்கம் ரொம்பப் பெரியது.
Be the first to rate this book.