ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படுவது வியர்வைத் துளியா? மழைத்துளியா? மழைத்துளி மட்டும் இருந்தால் போதுமா வியர்வைத் துளியும் இருந்தால்தான் அந்த நாடு முன்னேறும். இயற்கை வளங்கள் இருந்தால் மட்டும் ஒரு நாடு முன்னேற முடியாது. அங்கே மனித வளமும் இருந்தால்தான் அந்த நாடு முன்னேற முடியும். சில வேளைகளில் இயற்கை வளங்கள் இல்லாத நாடுகளில் மனித வளம் மட்டுமே கொண்டு சில நாடுகள் முன்னேறி இருக்கின்றன. நாம் அடிக்கடி எடுத்துக் காட்டுகின்ற உதாரணம் ஜப்பான். இயற்கை வளமே இல்லாத ஒரு நாடு எரிமலைகள் நிறைந்த நாடு; விவசாய பூமி குறைவாக கொண்ட ஒரு நாடு; பொருளாதாரத்தில் மிகச் சிறந்த நிலையில் உள்ளதென்று சொன்னால் அதற்குக் காரணம் மனிதவளம் மட்டுமே! அவர்களுடன் அறிவுக்கூர்மையும் கடினமான உழைப்பும் அந்த நாட்டை மேலேகொண்டு வந்திருக்கிறது. ஆகவே உழைப்புதான் ஒரு நாட்டை உயர்த்துகிறது.
இவ்வாறு உழைக்கின்ற மக்கள் காலம் காலமாக சுரண்டப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் வரலாற்றில் பார்த்து வந்திருக்கிறோம். உழைப்பாளனுடைய மேன்மையை இஸ்லாம் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழிலாளியுடைய கையைப் பிடித்தார்கள். அது கருத்துப்போய் கரடு முரடாக இருந்தது. "ஏன் இப்படி இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது: "உழைத்து உழைத்து என்னுடைய கைகள் இப்படி ஆகிவிட்டன" என்று சொன்னபோது அந்தக் கரங்களை எடுத்து முத்தமிட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆக உழைப்பதற்கு எவ்வளவு மரியாதை! உழைப்பதும் கூட ஒரு வணக்கம் என்று இஸ்லாம் கூறியது.
தொழிலாளர் கடமை, உரிமை, முதலாளி கடமை என ஒரு பார்வை பார்த்துவிட்டு இறுதியான பகுதியில் நியாயமான கேள்விகளுக்கு நடுநிலையான பதில்களும் தரப்பட்டுள்ளன. இது புத்தகத்தை வாசிப்பவருக்கு இன்னும் உச்சாகத்தை அளிக்கிறது.
சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டது. சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமை கிட்டுவதே சமூக நீதியாகும். கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டினர், நலிவுற்ற பிரிவினர் ஆகிய அனைவருக்கும் உரிமைகள் கிட்ட வேண்டும். ஏழைக்கும் உரிமை உண்டு, பணக்காரனுக்கும் உரிமை உண்டு. தொழிலாளி - முதலாளி இருவருக்கும் உரிமை உண்டு. ஆள்வோர் - ஆளப்படுவோர் இருவருக்கும் உரிமைகள் உண்டு. உரிமைகள் ஒரு வழிப் பாதையாய் இருக்கக்கூடாது. ஒருவரின் உரிமை மற்றவருக்குக் கடமையாகி-விடுகிறது. உரிமையும் கடமையும் இணைந்தே வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தில் அமைதி நிலவும்.
இந்த நூலில் தொழிலாளி - முதலாளி உரிமைகள் கடமைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமை குறித்து 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பேசப்பட்டு வருகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி - முதலாளி உரிமைகள், கடமைகள், உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் போராட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது. இந்தச் செய்தியை மிகவும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.