முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர் கிடைத்திருந்தால், உடனே ‘ஸ்டார்ட் அப்’ ஆரம்பித்திருக்கலாம், குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், கைகோத்துத் தொழிலை வளர்க்கத் திறமையான கூட்டாளியும் கிடைத்திருந்தால் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்திருக்கலாம்..!
இப்படியான ஏக்கமான கருத்துகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு, புதிய வெளிச்சம் காட்டும் வகையில், டாக்டர் ஆர். கார்த்திகேயன் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழான ‘வெற்றிக்கொடி’யில் எழுதிய தொடர்தான் ‘தொழில் தொடங்கலாம் வாங்க!’. வெவ்வேறு துறைகளுக்கு உரிய நிர்வாகப் பாடங்களையும் அனுபவப் பாடங்களையும் சரியான கலவையில் கட்டுரைகளாகக் கொடுப்பதில் ஏற்கெனே தனி முத்திரை பதித்தவர்தான் கார்த்திகேயன்.
300 சதவீதம் லாபம் எதிர்பார்த்து ஓட்டல் பிசினஸ் செய்தவர் நாளடைவில் நஷ்டமடைந்தபோது, அவரை போட்டியாளரிடம் வேலைக்குச் சேர்ந்து தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்ளச் சொல்கிறார் இந்தக் கட்டுரைத் தொடரில். ‘இதில் எந்த துரோகமுமில்லை!’ என்று புரிய வைக்கும் அந்தக் கட்டுரை, நிர்வாக ஆலோசனையில் தனித்துவம் வாய்ந்தது.
பலரை ஏமாற்றித்தான் சிலர் வளர முடியும், குறுக்கு வழியில் போகாமல் பெரிய தொழிலதிபர் ஆக முடியாது என நெடுகாலமாக உள்ள தவறான கற்பிதங்களை மாற்றும்விதமாக உளவியல் நோக்கில் நுணுக்கமாக எழுதப்பட்டது - ‘மனோ நிலைதான் முக்கிய மூலதனம்’ என்ற கட்டுரை. உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவின் பணக்காரர்கள் இருந்தாலும், வறுமை நாடுகளின் பட்டியலில் துவளும் இந்தியர்களுக்குத் தீர்வு சிறுதொழில் மேம்பாடுதான் என்பதை விவரிக்கும் கட்டுரை - ‘மல்லையா அளவுக்குச் சிறுவியாபாரிகளை நம்புவதில்லையே!’. கொள்ளை லாபம் வைத்து வியாபாரம் செய்தால் மளமளவென வளர்ந்துவிடலாம் என்கிற நினைப்பை நிர்வாக அறிவியலின் வழியாக மறுதலிக்கும் கட்டுரை - ‘லாபமா, கொள்ளை லாபமா?’.
இவ்வாறு வழக்கமான நிர்வாகவியல் ஆலோசனைக்கு அப்பால் பணிவாழ்க்கை நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை உளவியலின் அடிப்படையில் நின்று நிதர்சன அணுகுமுறையில் ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். இதுதவிர உலகமயமாக்கல் சூழலில் சிறு அளவில் தொடங்கி பெரிய வணிக ஜாம்பவானாக வளர்ந்திருக்கும் பல நிறுவனங்களின் வெற்றிச் சூத்திரங்களையும் லாகவமாகச் சொல்லி இருக்கிறார் கார்த்திகேயன்.
உங்கள் புத்துணர்வைத் தூண்டி, புதிய நம்பிக்கையை துளிர்க்கச் செய்து, வெற்றிப் பாதையில் நடைபோட இப்புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
Be the first to rate this book.