கோதைக்கு ஊர் சிவகாசி. அவரது உள்ளமோ சாரல் விழும் தென்காசி. இவர் நிஜ உலகின் இருளைக் கண்டு மருளாமல் அன்பின் வெளிச்சத்தில் அமைதியாய் பயணித்துக் கொண்டிருப்பவர். தமிழிலக்கியம் படித்திருக்கும் கோதையின் மொழியில் சிக்கல் இல்லை; சிடுக்கு இல்லை. ஏதோ ஒரு லயத்தில் இவரது சொற்கள் தம்மைத்தாமே சீர்படுத்திக் கொள்கின்றன.
குமுறுகிற கொந்தளிக்கிற அலை வீசும் கடலோரத்தில் மணல் வீடு கட்டி சிரித்து மகிழும் குழந்தை கோதை. அச்சம் அவரை அண்டுவதில்லை. அன்பைத் தவிர பிறிதொரு உணர்வில் அவர் வாழ்வதும் இல்லை. ஓசையற்ற ஆனந்த நிலைதான் அவரது வாழ்நிலை. அகத்தில் முகிழ்க்கும் இந்த மென்உணர்வுகள் அவரது கவிதைகளாக உருக்கொள்கின்றன. ஏக்கத்தின் இழை ஒன்று காற்றில் அலையும் கொடி போல தென்பட்டாலும் வாழ்க்கையை நேர்முகமாக உறுதியோடும் ஒப்பனையற்றும் ரசனையோடு எதிர்கொள்ளத் தூண்டுகின்றன கோதையின் கவிதைகள். ஆறு, கடல், நிலம், நீர், பூ என இயற்கையின் அனைத்து வடிவங்களையும் புதிது புதிதாய் தனது கவிதைகளில் பதியச் செய்கிறார் இவர்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘ஓங்கில் மீன்கள்’ வெளிவந்து நூறு நாட்கள் கூட முடியவில்லை; அதற்குள் ‘தோட்டது ஊஞ்சல்’ அமைதியாய் ஆட வருகிறது. அவசரமாக வரவில்லை என்பது மட்டும் உண்மை. அழைப்பு ஒலி கேட்டு கைவேலையை அப்படியே விட்டுவிட்டு கதவைத் திறக்க வரும் பெண்ணைப் போல இயல்பாக இன்முகம் காட்டியபடி இந்தத் தொகுப்பை முன்வைக்கிறார் கோதை. இதம், லயம் நயமிக்க எளிய சொற்களில் வரைந்த கோலம் இது.
Be the first to rate this book.