சீர்திருத்தத்தின் பேரால் எதையாவது பழிப்பது, எதையாவது குறை கூறுவது என்பதல்ல நமது நோக்கம். இருப்பதையும், நடப்பதையும், இதுகாறும் வழக்காற்றில் செல்வாக்குப் பெற்றுள்ளதையும் மாற்றிவிட வேண்டு மென்பதுமல்ல நமது எண்ணம். நாம் தொட்ட தென்றும், மாற்றியமைத்த தென்றும் ஏதேனும் சில இருக்கவேண்டுமென்பது மல்ல நமது ஆசை. ஆனால், நாட்டு மக்கள் நல்வாழ்வு நடத்தவேண்டும், அதற்கு வழி வகை காணவேண்டும். அந்த நல்வாழ்வு தடைப்படவும், பாழ்படவும், எவை எவை மூலமாகவும், காரணமாகவும் உள்ளனவோ அவை அழிக்கப்படவேண்டும், அம்மூலாதாரங்கள் களையப்படவேண்டும் என்பதே நம் ஆசை, இலட்சியம்; அதற்காகவே நம் பணி, தொண்டு.
நமது இயக்கம் எவரிடத்தும் பகைமை பாராட்டுவதாலோ, எந்தக் கூட்டத்தாரையும் ஒழித்து விடும் நோக்கத்தாலோ, தோன்றியதல்ல. திராவிட மக்களின் ஒன்றுபட்ட நல்வாழ்விற்குத் தடையாக, தகாதவர்களாக யார் யார் உள்ளனரோ, அவர்கள் எந்தத் திருக்கூட்டத்தைச் சார்ந்தவரானாலும், எத்தகைய அய்தீக பரம்பரையினரானாலும், அவர்களையும் திருந்தச் செய்து, சமூக வாழ்விற்கு ஏற்ப நல்லவர்களாக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களது உயிர், உடல், உடைமை ஆகியவைகளுக்கு எவராலும் ஊறு விளைவிக்கப்படாமல் இருக்கத் திருடர்களையும் குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதையும் தண்டனை அளிப்பதையும், அவர்களது பட்டியலைப் பொது மக்களுக்கு அறிவிப்பதையும், போலீஸ், நீதி இலாகாக்களின் மூலம் (நல்லதொரு) அரசாங்கம் செய்து வருவதைப் போலத்தான், நாட்டு மக்களின் நல்வாழ்விலே கவலை கொண்டுள்ள நாம்-பழமையுடையது, முன்னாள் ஏற்பாடு, அனாதி வேதம், ஆரிய சாஸ்திரம், மதக் கட்டளை என்பவற்றின் பேரால், சமூகத்திற்குப் பலப்பல தீங்குகளையும், குற்றங்களையும், கொடுமைகளையும், இழைத்து வருபவர்களை நாட்டு மக்களுக்கு அறிவித்து வருகிறோம். அவர்களையும் - சமூக தண்டனைக்கு ஆளாகாவண்ணம் எச்சரித்து வருகிறோம்.
Be the first to rate this book.