தொல்லினக்குழு நிலையில் இருந்து நாகரிக நிலையை அடையும் காலகட்டம் வரையான மனித இனத்தின் வளர்ச்சி குறித்தப் புரிதலை உருவாக்கும் கண்ணோட்டத்தில்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தொல்லினக்குழு காலத்தில் இருந்த கண ஆட்சி முறையில்தான் உண்மையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன இருக்கும். கண ஆட்சிமுறை என்பது ஆண்-பெண் வேறுபாடு இன்றி அனைவரும் அனைத்திலும் சமமாக இருந்த ஒரு காலகட்டம். சொத்துடமை தோன்றிய பின் கண ஆட்சிமுறை அழிந்து, அவ்விடத்தில் நாகரிகத்தின் அடையாளமான நகர அரசு தோன்றுகிறது. முதலில் உலகம் முழுவதும் நகரஅரசுகள்தான் தோன்றுகின்றன. கிரேக்க உரோம தொல்லினக் குழுக்கள், தொல்லினக்குழு நிலையில் இருந்து, நகர அரசுகளாக உருவானது குறித்த வரலாற்று நிகழ்வுகள் இங்கு பேசப்பட்டுள்ளன.
பழந்தமிழகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. பழந்தமிழகத்தின் சங்ககாலம் (கி.மு. 750 – கி.மு. 50) என்பது நகர அரசுகள் நிலைபெற்று இருந்த காலகட்டம். நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிட பலவகையிலும் உயர்வளர்ச்சி பெற்றனவாக இருந்துள்ளன என்பதை வரலாறு உறுதி செய்துள்ளது. பழந்தமிழக நகர அரசுகளும், மகதப்பேரரசை விட பல்வேறு துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன என இந்நூல் உறுதி செய்கிறது. .தமிழக நகர அரசுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த பொருள்முதல்வாத மெய்யியலான எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் குறித்தும் இந்நூல் பேசுகிறது.
சேரன் செங்குட்டுவன், மாமூலனார் ஆகியவர்களின் காலமும் சங்ககால கட்டங்களின் காலமும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான சாங்ககாலகட்ட வேந்தர்கள் குறித்த, மிகச் சுருக்கமான வரலாறும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இக்காலகட்ட வட இந்திய, தக்காண அரசுகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் சார்ந்த பல்வேறு தரவுகள் இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தொல்லினக்குழுக்கள் குறித்தும், தொல்லினக் குழுக்கள் நகர அரசுகளாக உருவாவது குறித்தும், பழந்தமிழக நகர அரசுகள் குறித்துமான ஒரு கழுகுப்பார்வையை இந்நூல் வழங்குகிறது.
Be the first to rate this book.