தொல்கபிலர் இன்றைக்கு 2750 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு தமிழர். அவரது சாங்கியம் எனப்படும் எண்ணியம் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்ற ஒரு முழுமையான தத்துவார்த்த அறிவியல் கோட்பாடு.
தொல்கபிலரின் சாங்கியம் எனப்படும் எண்ணியம் மிகத் தொன்மையானது எனவும் ஆதி காலத்தில் எண்ணிய தத்துவத்துக்கு இருந்த செல்வாக்கை மகாபாரதம் முதல் புராணங்கள் வரை அனைத்தும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கின்றன எனவும், கீதை முதல் மனுவின் சட்ட நூல் வரை உபநிடதங்கள் உட்பட அனைத்து நூல்களும் கபிலரின் கருத்துக்களால் நிறைந்துள்ளன எனவும் கார்பே கூறுகிறார்.
அன்றும்சரி, இன்றும்சரி – மேற்குலகிலும் சரி, கிழக்குலகிலும் சரி – எண்ணியத்தின் தாக்கங்கள் இல்லா மெய்யியலே இல்லை எனக் கருதப்படுகிறது. தொல்கபிலரின் எண்ணிய மெய்யியல் கருத்துகள் மேற்குலகத்துக்கு அன்றே சென்றுள்ளன.
பரிணாமக் கோட்பாட்டின் (THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத் தோற்றம் பற்றிய கபிலரது கருத்துக்கள் அமைந்துள்ளன. நவீன அறிவியலின் சிற்பிகளான ஐன்சுடீன், இசுடீவன் ஆக்கிங் ஆகியோர் கூறிய 90 விழுக்காடு கருத்துக்களை தொல்கபிலர் அன்றே எளிய தத்துவார்த்த மெய்யியல் வடிவில் கூறிச்சென்றுள்ளார். ஆதலால் பொருள்முதல்வாத மெய்யியலில் அவரை மார்க்சியத்துக்கும் முன்னோடி எனலாம்.
எண்ணியம் குறித்துப் பல்வேறு கோணங்களில் இந்நூல் ஆய்வு செய்கிறது. எண்ணியம் தோன்றுவதற்கான தமிழகத்தின் பின்புலம், எண்ணிய மெய்யியலின் அடிப்படை பற்றிய விளக்கங்கள் ஆகியன குறித்து இந்நூல் விரிவாகப் பேசியுள்ளது.
ஆசிவகத்தின் அடிப்படைகள், அதன் மூன்று நிறுவனர்கள், எண்ணியத்தின் அடிப்படையில் இருந்து உருவானதுதான் ஆசிவகம் ஆகியன குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.. இறுதியாக எண்ணிய மெய்யியல் குறித்த ஒரு முழுமையான கருத்தியலை இந்நூல் வழங்குகிறது எனலாம்.
Be the first to rate this book.