பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார்.
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புதிய சிக்கலான வட்டாரங்களில் அவர் பயணம் செய்தார். அப்படிப்பட்ட வட்டாரங்களில் தொடக்கக் கால கிளர்ச்சியாளர்கள் என்ற இந்த நூல் குறித்து நிற்கும் பகுதியும் ஒன்று.
பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர்களான Annales School of History என்ற அணியின் செல்வாக்கு இவரிடம் உண்டு என்று இவரை மதிப்பிடுவார்கள். வரலாறு என்பது வெறுமனே பொருளாதாரமோ அரசியலோ மட்டும் அல்ல அது மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் தழுவி நிற்பது. அரசியல், பொருளாதாரம் ஆகிவற்றோடு பண்பாடு, கலைகள், விஞ்ஞானம், சமயம், நம்பிக்கைகள் இன்னும் பிற வரலாறு என்பதில் ஆழக் கலந்து நிற்கின்றன என்பது அன்னல்ஸ் வரலாற்றுப் பள்ளியின் கருத்து.
எரிக் ஹாப்ஸ்பாம் பிரிட்டனில் வாழ்ந்தாலும் அவர் மத்திய ஐரோப்பிய பண்புகளைக் கொண்டவர் என்றும் இவரை மதிப்பிடுவர். வரலாறு குறித்த அவரது ஒவ்வொரு நூலிலும் அரசியல், பொருளாதாரம் பண்பாடு, மரபுகள், கலைகள், விஞ்ஞானம் ஆகியவை கூடிக்கலந்து அமைந்திருக்கும்.
19-20 ஆம் நூற்றாண்டுகளில்,மிகப் பழமையான மரபின் வடிவங்களைத் தம்முள் தக்கவைத்தபடி, இத்தாலி,ஸ்பெயின்,ஜெர்மனி,பிரான்சு போன்ற நாடுகளில் வெடித்தெழுந்த விவசாயிகள்,நகர்ப்புறக் கைவினைப் பாட்டாளிகள்,மாஃபியா குழுக்கள்,கொள்ளையர் குழுக்கள்,ஆரம்பகால நகர்ப்புற தொழிலாளர் குழுக்கள் ஆகியோரின் சமூக உளவியலையும்,அவர்களின் அரசு எதிர்ப்பு எழுச்சிகளையும் எரிக் ஹாப்ஸ்பாம் தனது தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் நூலில் எடுத்துக்காட்டுகிறார்.
வரையறுக்கப்பட்ட நவீன அரசியல் வேலைத் திட்டம் இவர்களிடம் இருப்பதில்லை.ஆயின் ஏழை எளிய மக்களின் ஆதரவையும் பணக்காரர் எதிர்ப்பையும் இவர்கள் கொண்டிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக அரச எதிர்ப்பையும் பல வேளைகளில் சர்ச் எதிர்ப்பையும் இவர்கள் கொண்டிருந்தனர்.
பாதிரிமாரை எதிர்த்த போதிலும் இறைவன் தம் பக்கமே இருக்கிறார் என்று இக்கலகக்காரர்கள் நம்பினர். பலவேளைகளில் அராஜகம் இவர்களது வேலைத் திட்டமாக இருந்தது.பொதுவுடைமையை இவர்கள் இலக்காக அறிவித்ததுண்டு. கிறிஸ்தவத் தொடர்ச்சியை தக்க வைத்துக் கொண்டு,தொழிலாளர் சபைகளில் இயேசு வாழ்கிறார் என்று இவர்கள் சொல்லியதுண்டு.
கிளர்ச்சியாளர்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுகளை எரிக் ஹாப்ஸ்பாம் விரிவாக எடுத்துக்காட்டுகிறார். ஏழை மக்களின் இறைநம்பிக்கை
நீதி நியாயம் குறித்த அவர்களின் மிக ஆழமான நம்பிக்கைகளின் மீது இந்த உறவுகள் கட்டப்பட்டுள்ளன என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.எனவே பூமியில் நீதி நியாயத்திற்குச் சேதாரம் ஏற்படும்போது இறைவன் ஏழை உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக வந்து தலையிடுவார் என்று அவர்கள் நம்புகின்றனர்.
பேராசிரியர்.நா.வானமாமலை தனது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் நாட்டில் மழை சரியாகப் பெய்யாமல் வளம் குன்றிப் போகும் போது
கொடும்பாவி எரித்தல் எனும் சடங்கு ஒன்றை மக்கள் நிகழ்த்துகின்றனர் என்று தெரிவிக்கிறார்.சமூக வாழ்வில் நிகழும் அநியாயங்களின் குறியீடாகவே கொடும்பாவி விளங்குகிறது என்பதைக் காண்கிறோம்.
கிறித்தவ இறையியலின் பல கருத்தாக்கங்கள் இடைக்கால வரலாற்றில் ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக மறுபொருண்மை உருவாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதை ஹாப்ஸ்பாம் எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வோர் ஆயிரமாவது ஆண்டின் போதும் உலகைச் சரிசெய்ய இறைவன் தனது தூதுவரை அனுப்பி வைப்பார் என (Millenarianism) மக்கள் எதிநோக்கியிருப்பர்; இவ்வகை நம்பிக்கைகளில் சமயமும் சமூகமும் கலந்த நிலையில் உள்ளன என்று எரிக் ஹாப்ஸ்பாம் விளக்குகிறார்.
இவை அரசியலுக்கு முந்திய (Pre-Political) சமூக இயக்கங்கள் என்று எரிக் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுகிறார்.இவ்வியக்கங்களைத் தன்னிச்சையானவை என்று புறந்தள்ளுதல் கூடாது என ஹாப்ஸ்பாம் எச்சரிக்கிறார். மாறாக, இவை மரபு சார்ந்த ஓர் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன,மானுடம் தழுவிய பொது நியதிகளையும் கொண்டிருக்கின்றன,மானுடம் தழுவிய பொது நியதிகளையும் நீதிகளையும் அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியர்கள் தனித்த முயற்ச்சிகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
"மரபுகளைச் சாதாரணமானவையாகக் கருதாதீர்கள் அவற்றுள் வெகுமக்கள் வரலாறு நெடுக உற்பத்தி செய்த எதிர்ப்பின் வடிவங்கள் (தகவமைப்புகளின் வடிவங்களும் தான்) உறைந்து கிடக்கின்றன" என்று எரிக் ஹாப்ஸ்பாம் எழுதுகிறார். தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் நூலை எழுதி முடித்தபோது எரிக் ஹாப்ஸ்பாம் தனது முறையியலைக் கீக்கண்டவாறு தெரிவிக்கிறார்.
நான் ஒரு வகையான கெரில்லா வரலாற்றாசிரியன் நேர்ச் சாலையில் நான் நடப்பதில்லை பாறைகளின் இடுக்கிலிருந்தும், புதர்களுக்கு இடையிலிருந்தும் நான் தாக்குவேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.
எரிக் ஹாப்ஸ்பாமை ரசிக்க முடிகிறது. தமிழில் எரிக் ஹாப்ஸ்பாம் உண்மையில் அறியப்படாதவர் அல்லர்.அவரது நூல்கள் நேரடியாக மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்தடவையாக இருக்கலாம்.
ஆயின் பேராசிரியர் நா.வானமாமலையால் உருவாக்கப்பட்ட நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் மற்றும் ஆய்வுகளும்,பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் அவர்கள் அறிமுகப்படுத்திய அடித்தளமக்கள் வரலாறு மற்றும் வாய்மொழி வரலாறு, சமூகக் கொள்ளையர் ஆய்வு போன்றனவும் எரிக் ஹாப்ஸ்பாமின் எழுத்துக்களை பெரிதும் சார்ந்திருப்பவை.
Be the first to rate this book.