‘வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை' என்ற வசனங்களுடன் அந்நஹ்ல் அத்தியாயம் தொடங்குகிறது.
அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உணர்த்தும் விதமாகவே பலகோடிப் படைப்பினங்களும் விளங்குகின்றன. இவை அவனுடைய பேராற்றலுக்கும் பேரருளுக்கும் மாபெரும் சான்றுகளாகும். இப்படைப்புக்கள் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த படைப்பினமான மனித இனத்திற்கு, தான் செய்த பல்வேறு அருட்கொடைகளை இந்த அத்தியாயத்தின் நெடுகிலும் அல்லாஹுதஆலா எடுத்துச் சொல்கிறான்.
இதை விளங்கிக் கொள்ளும் விதமாக மௌலானா மௌதூதி அவர்கள் 8ஆவது வசனத்திற்குக் கொடுக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வரும் 10இலிருந்து 16 வரையுள்ள வசனங்களுக்குக் கொடுக்கும் விளக்கங்களும் ஏகத்துவத்தைப் பறைசாற்றும் விதமாகவே அமைந்துள்ளன.
நபித்துவத்தின் மீது ஐயம் கொண்டுள்ளவர்களின் அவநம்பிக்கையைக் களைகின்ற விதமாக வசனம் 44இல் ‘மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அறிவுரையை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும், அவர்களும் (சுயமாகச்) சிந்தித்துணர வேண்டும் என்பதற்காகவும், என்று அல்லாஹ் அமைத்துள்ளான். அதற்குரிய விளக்கத்தில் மௌலானா மௌதூதி அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஹதீஸின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளும் விதமாக விளக்கியுள்ளார்கள்.
மேலும், அல்லாஹ்வின் வசனத்தைப் புரிந்து, சிந்திக்கத் தூண்டும் விதமாக மௌலானா மௌதூதி அவர்களின் அனைத்து விளக்கங்களும் இருக்கின்றன. இதற்கோர் எடுத்துக்காட்டாக வசனம் 65ஐக் குறிப்பிடலாம். ‘அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்து போன பூமியை உயிரூட்டச் செய்கிறான், செவியேற்கும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது' என்பதற்கு அளிக்கும் விளக்கம் சுலபமாக விளங்கிக்கொள்ள உதவுகின்றது.
இவ்வாறே, இவ்வத்தியாயத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான அறிவாதாரங்களை அந்நஹ்லின் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. நபித்துவம், திருக்குர்ஆனின் வாய்மை, மெய்யான மறுமை, மீண்டும் உயிர்ப்பித்தல், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை மறுப்போர்க்கு எச்சரிக்கை எனப் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடும் வசனங்களுக்கு விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
Be the first to rate this book.