தஃப்ஹீமுல் குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கவுரை அத்தியாயம்: 7 அல் அஃராஃப் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமிழில்: அப்ஜலுல் உலமா, மௌலவி M.I. முஹம்மது சித்தீக் உமரி, மதனி, M.A., M.Com. மனித குல வரலாற்றில் எத்தனையோ மதங்கள், பண்பாடுகள், நாகரிகங்கள் தோன்றி முத்திரை பதித்திருக்கின்றன; எழுச்சிக் காவியங்களை எழுதியிருக்கின்றன. காலப்போக்கில் சறுக்கி விழுந்து தொலைந்து அழிந்து சுவடுகள் கூட இல்லாமல் போய் இருக்கின்றன. ஆனால் பண்பாடுகளின் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் மார்க்கத்தைக் கட்டமைத்த, பண்பாட்டைப் பண்படுத்திய, நாகரிகத்தை செதுக்கியமைத்த, சமூகத்தை வார்த்தெடுத்த ஒற்றை நூல் ஒன்று உண்டு என்றால் அது குர்ஆன் மட்டுமே! குர்ஆனுக்கு மட்டும்தான் அந்தச் சிறப்பு! குர்ஆனைப் புரிந்து கொள்வதற்காக, அது முன் வைக்கின்ற அழைப்பை விளங்கிக் கொள்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை காலத்தை வென்று நிற்கின்றன. இந்தத் தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் எழுதிய தஃப்ஹீமுல் குர்ஆன் குறிப்பிடத்தக்கது. தஃப்ஹீமுல் குர்ஆன் - திருக்குர்ஆன் விளக்கவுரையை எழுதிய மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் தற்கால இஸ்லாமிய எழுச்சியின் முதன்மைச் சிற்பியாக, இயக்கத் தலைவராக, சிந்தனையாளராக முத்திரை பதித்து நிற்கின்றார். குர்ஆன் விரிவுரை இலக்கியங்களில் தஃப்ஹீமுல் குர்ஆனுக்குத் தனி இடம் உண்டு. நவீனத்துவம், பாரம்பர்யம் போன்ற அளவுகோல்களைக் கொண்டு அதனை மதிப்பிடுவதும் சிரமமானதே! மறுமலர்ச்சியை ஏற்படுத்துகின்ற புரட்சிகரமான நூல் என்று அதனைச் சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஆம். உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! உலகாயதச் சிந்தனைகளும், மேற்கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! அரபி, ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜராத்தி, சிங்களம், துருக்கி, தெலுங்கு, பார்ஸி, புஷ்து, மலையாளம், ஜெர்மன் என ஏராளமான மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சிறப்புமிக்க தஃப்ஹீமுல் குர்ஆன் தமிழிலும் மொழிபெயர்ப்பை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சமர்ப்பிக்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்! இந்த அறப்பணியின் தொடக்கமாக அல் ஃபாத்திஹா, அல் கஹ்ஃபு ஆகிய இரண்டு அத்தியாயங்களின் விளக்கவுரை 2008 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரைகள் முறையே 2009 ஜனவரி, ஜூலை மாதங்களில் வெளியாயின. அதன் தொடர்ச்சியாக ‘அல் அஃராஃப்’ அத்தியாயத்தின் விளக்கவுரை இப்போது உங்கள் கைகளில்! இனி வருங்காலங்களில் பிற அத்தியாயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ்! இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத் தலைவிகள், ஆலிம்கள் என எல்லாருடைய கைகளிலும் இந்த நூல் தவழ வேண்டும் என்பது எங்கள் பேரவா! வாசியுங்கள்! மற்றவர்களுக்கும் வாசிக்கக் கொடுங்கள்! எண்ணங்கள் ஈடேற இறையருள் துணை நிற்கட்டும்!
Be the first to rate this book.