தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவர் சீமான். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து அரசுக்கு எதிராக ஆவேச வாதங்களை எழுப்பியதால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் சீமான். ஐந்து மாத சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சிறை மீண்டுவந்த சீமான், ஜூனியர் விகடனில் ‘திருப்பி அடிப்பேன்!’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்தான் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! ஈழத் துயரங்களையும், தாய்த் தமிழகத்தில் நிகழும் சகிக்க முடியாத அரசியல் போக்கையும், கனல் தெரிக்கும் வார்த்தைகளால் ஒப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இளைஞர்களை முறுக்கேற வைத்தன. ஒவ்வொரு கட்டுரையிலும் உக்கிரமாக வெடித்த சீமானின் வார்த்தைகள், அரசியல் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்துக்கான பெரும் போராக ஒவ்வொரு தமிழனையும் உசுப்பேற்றின! சீமானின் ஆவேச வீச்சை, உக்கிரம் குறையாதபடி பதிவு செய்திருக்கிறார் இரா.சரவணன். ஜூனியர் விகடனில், பற்றி எரியும் பரபரப்புத் தொடராக வெளிவந்த சீமானின் கட்டுரைகள், நிச்சயம் உங்களையும் அதே ஆவேசத்தோடு ஆட்கொள்ளும்!
Be the first to rate this book.