ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுவது அந்நாட்டின் வரலாற்று நூல்களேயாகும். பல்வேறு காலகட்டத்தில் சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாக மட்டுமின்றி பல சமூக இயக்கங்களின் பதிவாகவும் வரலாறு அமைகிறது. முன்னோர் வாழ்ந்து காட்டிய உயர்ந்த நெறிகளையும், அவர்கள் கொண்டிருந்த சிறந்த பண்பினையும் பின்னோர்க்கு நினைவூட்டி, அவர்களை நல்வழிப்படுத்துவது நாட்டின் பழைய வரலாறே எeனலாம். கடந்தகால வரலாற்றை நிகழ்கால மனிதன் முழுமையாக அறிந்து கொண்டால்தான் எதிர்கால வரலாற்றை சிறப்பாக அமைக்க முடியும் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறு சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வின் உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. பெனிதெட்டோவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர், தங்கள் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து அவற்றை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு அவர்களது தாய்மொழியில் நூல்களாக எழுதி வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில், தற்போது தமிழக வரலாற்று அறிஞர்கள் பலர், தமிழனின் பண்பாட்டையும், மிகவும் பழமையான வரலாற்றையும் ஆய்வு செய்து நூல்களாக வெளியிட்டு வருகின்றனர். பொதுவாக, இந்திய வரலாற்றை எழுதும் வரலாற்று ஆய்வாளர்கள் பலர், தமிழக வரலாற்றுக்கு முக்கிய பங்கு தங்கள் நூலில் அளிப்பதில்லை. தற்போது அறிவியல் வளர்ச்சியினாலும், தமிழக வரலாற்றின் மீது கொண்ட பற்றினாலும் பல அறிஞர்கள் தமிழக வரலாற்றை ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள், புதுவையின் வரலாற்றை கண்டுகொள்வதில்லை. பிரெஞ்சியர்கள் வருகைக்கு முன்பு புதுச்சேரியின் வரலாறு என்பது தமிழக வரலாற்றுடன் இணைந்து ஒன்றாக இருந்தாலும், தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்களின் வாழ்விடங்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன. மேலும் புகழ்பெற்ற அரிக்கமேடும், பல்லவர்கால கோவில்களும், சோழர்கால கோவில்களும், அவர்களின் கல்வெட்டுகளும் ஏராளமாக புதுச்சேரியில் காணப்படுகின்றன.
புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் பண்டைய வரலாற்றை தன்னகத்தே கொண்டு இன்று சிற்றூர் போல காட்சி தரும் எண்ணற்ற கிராமங்கள் உண்டு. அக்கிராமங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகப் பெருவேந்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட திருக்கோவில்களை காணலாம். அவை தன்னுடைய வரலாற்றையும் தன் பழமையை கோடிட்டு காட்டுகின்றன. அக்கோவில்களை காண்போர் கண்களையும் கருத்தையும் கவரும் கலையழகுடன் விளங்குபவையாக உள்ளன. கலைப் பொக்கிஷமாக விளங்கும் கோவில்களின் கோபுரங்கள், சிற்பக்கலை கூடங்களாக விளங்கும் பதினாறுகால், நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபங்கள், கோவில்களில் உள்ள திருக்குலங்கள், தலவிருட்சங்கள் போன்றவை பேரும் பெருமையும் பெற்றவையாகத் திகழ்கின்றன.
இத்தகைய திருக்கோவில்களில் பல, பல நூற்றாண்டு காலமாக கவனிப்பாரின்றிச், சீர்கெட்டு தன் சிறப்பையும் பெருமையையும் இழந்து போயின. எண்ணற்ற கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் தன்னுடைய பழமையான வரலாற்றை சுமந்து கொண்டு அழிந்து போய்விட்டன. ஒரு சில கோவில்கள் தன்னைச் சுற்றியுள்ள ஊர்கள் அழிந்துவிட்ட போதிலும், தன்னுடைய பழமையான வரலாற்றைச் சுமந்து கொண்டு, பெருமையிழந்து பொலிவிழந்து சிதைந்து, இடிபாடுகளுடன் வௌவால்களுக்கும் துரிஞ்சல்களுக்கும் இடமளித்து மீள வழியின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்திருக்கோவில்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நாடு மொழி மதம் முற்றிலும் வேறுபட்டோரின் படையெடுப்பால் சீரழிந்து சின்னாபின்னமாக்கப்பட்டன. எண்ணற்ற கோவில் பொக்கிஷங்கள் கொள்ளயிடப் பெற்றன.
அந்நியர்களின் இன்னல்களையும், இடர்களையும் கடந்த கால ஆக்கிரமிப்பில் எதிர் நீச்சலிட்டுக் கொண்டு தன் பழம்பெரும் வரலாற்றைச் சுமந்து கொண்டு எஞ்சியிருக்கும் திருக்கோவில்கள் பல உள்ளன. அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த கோவில்களுள், புதுச்சேரி மாநிலம், திருபுவனையில் உள்ள வீரநாராயண விண்ணகர் திருக்கோவிலும் ஒன்று. பராந்தக சோழன் ஆட்சி காலம் முதல் விஜயநகரப் பேரரசர்களின் முற்பகுதிவரை சீரும் சிறப்புடன் விளங்கிய திருபுவனை, இன்று தன் பெருமையை இழந்து ஒரு சிற்றூராக காட்சி தருகிறது. திருமலையில் உள்ள வீரநாராயண விண்ணகர் திருக்கோவில் மட்டுமே திருபுவனை எனும் சிறப்பை இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அழிந்து போன அல்லது மறைந்து போன திருபுவனையில் பழமையான வரலாற்றை மீட்டெடுப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
திருபுவனையின் பழமையான வரலாற்றை மீட்பதில் நமக்கு பெரிதும் உதவுவது திருபுவனையில் உள்ள வீரநாராயண விண்ணகரம் என்று அழைக்கப்பட்டு, தற்போது வரதராஜப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் திருக்கோவிலிலுள்ள கல்வெட்டுகளே ஆகும். புதுவையில் உள்ள பாகூர், வில்லியனூர், திருவாண்டார் கோவில், மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டு தொகுப்புகளை விட, திருபுவனை வரதராஜப் பெருமாள் கோவிலில் காணப்படும் கல்வெட்டு தொகுப்புகளின் எண்ணிக்கையே அதிகம். அக்கோவிலில் மட்டும் 188 கல்வெட்டு தொகுப்புகள் உள்ளன. இவற்றில் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு ஒன்றும், விஜயநகர மன்னர்கள் கல்வெட்டு இரண்டும் போக, அனைத்து கல்வெட்டுகளும் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கல்வெட்டுகள் யாவும் இந்திய தொல்லியல் கள ஆய்வுத் துறையினரின் 'கல்வெட்டு ஆண்டறிக்கை' யிலும் (1919), ஒரு சில கல்வெட்டுகள் தென்னிந்திய கல்வெட்டு தொகுப்பிலும் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் உதவியுடன் திருபுவனையின் பழமையான வரலாறு இந்நூலில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்நூலில் வரலாற்றுக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.
Be the first to rate this book.