ஒவ்வொரு திரைப்படத்தின் சுருக்கமான கதை, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அந்தப் படத்தின் ஆதார அம்சத்தை ஒட்டிய விரிவான அலசல் என 31 திரைப்படங்களைப் பற்றி கார்த்திகேயன் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம் அவற்றிலிருந்து பெறப்படும் பாடத்தையும் நூலாசிரியர் சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.
கார்த்திகேயன் உளவியலாளர் என்பதால் திரைப்படக் கதாபாத்திரங்களின் மனப்போக்கு, கதை நிகழ்வுகளின் பின்னால் இருக்கும் தர்க்க நியாயங்கள் போன்றவற்றையும் விவரிக்கிறார். அது திரை விமர்சனத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது. நாவல்களில் இருந்து படமாக்கப் பட்டிருந்தால் அந்த நாவல்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் சேர்த்தே ஆசிரியர் தந்திருக்கிறார்.
இந்தப் படங்களைத் தமிழில் எடுத்தால் யார் யார் நடிக்கலாம், யார் இசை அமைக்கலாம் என்பன போன்ற கணிப்புகள் இந்தப் புத்தகத்தை தமிழ் மனத்துக்கு மேலும் நெருக்கமாக்குகின்றன.
ஆங்கிலம், இத்தாலி என அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப்பெற்றது.
Be the first to rate this book.