வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஆனால், மற்ற நூல்களில் இருந்து இந் நூல் வேறுபட்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளியமுறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. "இல்லறம் நல்லறம் ஆவது எப்போது?' என்ற முதல் கட்டுரையில், சிறு குழந்தைக்கு கூறுவது போல கேள்வி கேட்டு பதில் கூறும் பாங்கில் அமைத்திருப்பது நன்று. ஆனாலும், திரைப்படப் பாடல்கள், பட்டிமன்ற நகைச்சுவைகள் மூலம் சுவை சேர்க்க முயன்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். நூலின் பெரும்பாலான கட்டுரைகளில் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்வோரை கடுமையாக விமரிசித்துக் கருத்துக் கூறியிருப்பது இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. பெண்மையைப் போற்றிய பாரதியின் கருத்துகளையும் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது நூலின் தரத்தை உயர்த்தியுள்ளது. இலக்கியம், திரைப்படம், ஆன்மீகம் என அனைத்து நிலைகளிலும் இருந்து தற்போதைய தலைமுறை கற்கத் தவறிய விஷயங்களைக் கட்டுரைகள் பேசுகின்றன. அறம், பொருள், இன்பம் என நம் முன்னோர் வகுத்த நெறிமுறைப்படி வாழ வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார். அதாவது அறத்தின்படி பொருள் தேடினால் தீமையற்ற இன்பம் கிடைக்கும் என்பதே மொத்தக் கட்டுரைகளது சாராம்சமாக உள்ளது. ஆனால், திறமை என்பதே செல்வம் தேடுவதில் உள்ளது என்பதுபோல நூலின் தலைப்பு இருப்பதைப் பார்க்கும்போது, நூலாசிரியரும் நுகர்வோர் கலாசாரத்துக்குத் தப்பவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது
Be the first to rate this book.