அனைத்து அடர்த்தியான சிந்திப்பு வெளிகளையும் போல, சினிமா மொழிபுகளும் இருமை (Binary) எதிர்வுகளுக்குள் கட்டமைக்கப்பட்டும், அதைத் தகர்த்தெறிந்து புதிய தடங்களில் புரிதலுக்கான வழிகோலுதலுக்கு உட்பட்டும் இருக்கின்றன. மதிப்பிற்குரிய தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் தியடோர் பாஸ்கரன் அவர்களின் தடம், பூனே திரைப்பள்ளியின் உருவத் திருமேனியான சதீஷ் பகதூரின் வழியைத் தொடர்ந்து செல்கிறது. சினிமாவைக் கலைப் பொருளாகவும் காட்சி ஊடகமாகவும் முன்னிறுத்தி, அது நாடகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மொழியின் சாத்தியங்களை விரித்தெடுப்பதாகவும் அமைய வேண்டும் என்ற கலை சினிமாவின் நோக்கங்களை ஏற்றுக்கொண்டு, அத்தடம் தனது அவதானிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கிறது. யேசுராசாவின் தடமும், பகதூர் மற்றும் பாஸ்கரனின் சினிமாத் தத்துவத்தின் நீட்சியே. யேசுராசாவும் சத்தியஜித் ரே, அடூர், ஜோன் ஆபிரஹாமிலிருந்து மகேந்திரனின் சினிமா வரை கூர்ந்து அவதானிக்கிறார். மனதை வருடும் விஷயம் என்னவென்றால், யேசுராசா கடந்த மூன்று பதின்வருடங்களின் போருக்கும் அழிவுக்கும் ஊடாகச் சினிமாவையும் நாடகத்தையும் கலையின் ஆக்க சக்தியின் வெளிப்பாடாகத் தியானித்து, அதன் தூய சாத்தியங்களில் மையல் கொண்டிருக்கிறார். யேசுராசாவின் சினிமா / நாடகக் கட்டுரைகளின் இத்தொகுப்பு என்னைப் போன்ற சினிமா மாணவர்களுக்கு அரிய வரம்.
Be the first to rate this book.