தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது.
அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு’வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் நிர்ணயித்திருக்கின்றன.
இந்தக் கூறுகளால் ஆன படைப்பு மனம் இயல்பாகவே ஒரு பூரிதநிலையை எட்டியிருந்தது. அதில் மேலதிகமாக எதையும் சேர்க்கவோ அல்லது எடுக்கவோ அனுமதிக்காத முழுமையை அந்த மனம் கொண்டிருந்தது.
காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக்கொள்வதுபோலக் காலத்தின் கசிவை அந்தப் படைப்பாற்றல் உள்ளிழுத்துக்கொண்டு தன்னை நிரந்தரப் புதுமையாகவும் வைத்துக்கொண்டிருந்தது. இன்று வாசிக்கும்போதும் தி. ஜானகிராமனின் கதைகள் புதுமை குன்றாதவையாகவும் வாசகனை ஈர்க்கும் வசீகரத்தை இழந்துவிடாதவையாகவும் இருப்பது இந்த குணத்தால்தான்.
Be the first to rate this book.