கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள். வரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி. கருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி. மேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைப்பதில், விகடன் பிரசுரம் பெருமைகொள்கிறது. பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கும், தொல்பொருள் தொடர்பான நூல் வடிவங்களுக்கும் துணை புரியும் அற்புதத் தொகுப்பு இது. நூலினுள் நுழைந்துவிட்டால், அதன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்.
Be the first to rate this book.