இந்த நாவலில் தந்தை, மகன் என இரு தரப்புகளிலும் இருக்கும் உணர்வை முழுக்கமுழுக்க கசப்பு என்றோ, வெறுப்பு என்றோ வகுத்துவிட முடியாது. ஒருவகையான வருத்தம் அல்லது சங்கடம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காந்தியடிகளின் குரலில் எல்லாத் தருணங்களிலும் அந்த வருத்தமே வெளிப்படுகிறது. அன்பு, பகை, இன்பம், துன்பம், கோபம், வெறுப்பு எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் விடுபட்டு சத்தியத்தைத் தேடும் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் அவர். எல்லாத் தருணங்களிலும் மகனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் என தந்தையாகவே அவர் வெளிப்படுகிறார். மகனை மீண்டும் மீண்டும் தியாகத்தின் பாதைக்குத் திரும்பிவிடும்படி அழைக்கிறார். ஹரிலால்தான் அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கிறார். செவிசாய்க்க மறுக்கும் ஒருவர் அவரைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் புறக்கணித்துவிட்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு செல்பவராக இருப்பதுதானே இயற்கை. ஆனால் ஹரிலால் அப்படியும் இல்லை. ஒவ்வொரு கணமும் தந்தை என்ன செய்கிறார் என்பதைக் கவனித்தபடியே இருக்கிறார்.
வரலாற்றுத்தருணங்களை நாவலுக்குரிய தருணங்களாக உருமாற்றித் தொகுத்து, மிகச்சிறந்த ஒரு படைப்பை உருவாக்கியிருக்கும் கலைச்செல்விக்கு வாழ்த்துகள்.
- பாவண்ணன்
Be the first to rate this book.