காதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அல்லல்படுவார்களே... என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இயற்கை. அந்தக் கவலையை போக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே காதலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நூல் ஆசிரியர் மல்லை சத்யா. ‘பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குக் காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லி இருதரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இடித்துரைக்கிறார். காவியக் காதலான அம்பிகாபதி-அமராவதி காதலில் தொடங்கி, ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, அபிராமி பட்டர் அன்னை அபிராமி மீது கொண்ட பக்தி; ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் கதைகளையும் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இளவரசன் - திவ்யா காதல் வரை அலசியிருக்கும் நூல் ஆசிரியர், சாதிப் பேயை விரட்ட ‘காதல் செய்வீர்!’ என்கிறார். காதலை எதிர்பார்த்துக் காத்திருப்போரும், காதலை எதிர்ப்போரும் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். பெற்றோரையும், உற்றாரையும், உறவினரையும் காதலிப்போம்! கலவரமில்லா சமுதாயத்தைப் படைப்போம்!
Be the first to rate this book.