பௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலான போட்டியில்தான் தீண்டாமை உருவானது என்ற முடிவில் அம்பேத்கரும் அயோத்திதாசரும் தீண்டாமை குறித்து ஆராய்ந்த பிறரும் ஒன்றுபடுகின்றனர் என்றாலும் தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவோடு அயோத்திதாசரின் நிலைபாடு உடன்படுவதாக இல்லை. இது இரண்டு சிந்தனையாளர்களுக்கிடையிலான வேறுபாடு அல்ல. மாறாக, தமிழ்நாட்டில் தீண்டாமை உருவான காலம் என்பது இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தீண்டாமை உருவான காலத்திலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதன் வெளிப்பாடு ஆகும். தீண்டாமை தோன்றிய காலம் என அம்பேத்கர் வரையறுக்கும் கிபி 4ஆம் நூற்றாண்டு என்பதற்கும் தமிழக வரலாற்றின்மூலம் நாம் வந்தடையும் கிபி 11 ஆம் நூற்றாண்டு என்பதற்கும் இடையில் 7 நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளன. தற்கால இந்தியாவில் தீண்டாமை என்பது மிகவும் பிற்காலத்தில் தோன்றிய பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது. எனவே தீண்டாமையை, சாதியை ஒழிக்கும் முயற்சியை இங்கிருந்து துவக்குவதே ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும்.
Be the first to rate this book.