புதிரை வண்ணார்ளை சமூகம் எப்படி நடத்துகிறது, குறிப்பாக தாழ்த்தப்பட்ட இனங்களான பறையர், பள்ளர், அருந்ததியர் சமூக மக்கள் எப்படி நடத்துகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கையும் வாழும் இடமும் என்னவாக இருக்கிறது என்பதோடு தமிழ்நாட்டில் இன்று சாதிய மனோபாவம் எப்படி இருக்கிறது. தீண்டாமைக்குள் தீண்டாமை எப்படி பெருமையாக கௌரவமாக எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்பதை உண்மையின் வெளிச்சத்தில் இந்த ஆய்வு நூலை சி.லட்சுமணனும், கோ.ரகுபதியும் எழுதியிருக்கிறார்கள்.
புதிரை வண்ணார்களுடைய வாழ்வும் இருப்பும் குறித்து அறிவதற்கு இந்த நூல் மிகச் சிறந்த ஆவணமாக இருக்கிறது. ஆய்வாளர்கள் அனுமானமாக, யூகமாக எதையும் எழுதவில்லை என்பது இந்த நூலின் சிறப்புகளில் ஒன்று. இதுமாதிரியான இன வரைவியல் குறித்த ஆய்வுகள் நம் சமூகத்தின் உண்மையான முகத்தை அறிவதற்கு பெரிதும் உதவும். அதற்கு இந்நூல் முன்னோடியாக இருக்கும்.
ஒரு இனத்தின் சுதந்திரத்திற்கான வெளிச்சத்தைப் பேசும் நூல் இது. நிகழ்காலத்தில் செய்கிற தொழிலின் அடிப்படையிலான இழிவு குறைந்திருக்கலாம். ஆனால் பிறப்பின் அடிப்படையிலான இழிவு ஒரு நூல்கூட குறையாதபோது ‘இந்தியா ஒளிர்கிறது’, ‘மேக் இன் இந்தியா’ என்பது எல்லாம் மோசடியான வார்த்தைகளே. விளம்பரம். இழந்த உரிமைகளைப் போராடாமல் பெற முடியாது என்பதைத்தான் இந்நூல் புதிரை வண்ணார்களுக்கு அறிவுறுத்துகிறது.
இந்தியாவில் சாதி என்பது பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விதையாக ஊன்றப்பட்டு, பிறகு அது மரமாக வளர்ந்துவிடுகிறது. சாதிய மனோபாவம் இயற்கையாகவோ, இயற்கையினாலோ ஏற்பட்டதல்ல. இயற்கை சீற்றத்தை மட்டும்தான் மனிதனால் தடுக்க முடியாது. சாதி – இயற்கை சீற்றத்தைப் போன்றதல்ல. இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டதல்ல.
- எழுத்தாளர் இமையம்
Be the first to rate this book.