தோழர் அண்ணாதுரை கருத்துப் புரட்சி செய்து வரும் வீரர். அவர் எழுதும் தலையங்கங்களிலும் பேசும் பேச்சுகளிலும் புரட்சி வித்துகள் நிறைந்துள்ளன. அவை படிப்பவர் உள்ளத்திலும் கேட்பவர் நெஞ்சிலும் கருத்துப் புரட்சியை விதைத்து வளர்க்கின்றன.
வீரம் என்றால் வாள் ஏந்துவது என்றோ, தீப்பொறி பறக்க முழங்குவது என்றோ, கைக்கு எட்டிய வரையில் புடைப்பது என்றோ இருந்த காலம் மலையேறி விட்டது.
இனி வருங்காலத்தில் வீரம் என்றால் தன் உரிமையை இழக்காமல் பிறர் உரிமையை காப்பது என்றே பொருள் படும். உரிமையைப் பறிப்பது என்றால் ஒருவருடைய வீட்டையோ, வயலையோ, உணவையோ, உடையையோ பறிப்பது மட்டும் அல்ல, அவரைத் தாழ்வாக நினைப்பதும் உரிமைக்குக் கேடு செய்வதே ஆகும்.
ஆகையால் எதிர்கால வீர உலகத்தில், ஒத்த உரிமைக்கு அடிப்படையாக வேண்டியது ஒத்த மதிப்பே ஆகும். அந்த வீர உரிமை உணர்வால்தான் தோழர் அண்ணாதுரை இன்று இளைஞர் உள்ளங்களைக் கவர்ந்துள்ளார்.
- மு. வரதராசன்
Be the first to rate this book.