இலக்கியப் படைப்புகள் காலத்தின் சாட்சிகளாகவும், கடந்து வந்த வாழ்வியல் சுவடுகளை அடையாளப்படுத்துவதாகவும் அமையும் போது நீள் ஆயுள் பெற்றுவிடுகின்றன. யாவரும் அச்சத்தோடு பயணித்த தீ நுண்மிக் காலம் விளைவித்த பெருந்துயர்கள், திணித்த புதிய பழக்கங்கள் அதன் விளைவாக ஏற்பட்ட மன இடர்பாடுகள் யாவும் இரா.பூபாலன் அவர்களின் கவித்துவ நடையில் இலக்கிய சாட்சியங்களாகி நம்மைத் திகைக்க வைக்கின்றன. நாமும் எதிர்கொண்டவைதான் எனினும் வெறும் காட்சிகளாகவும், சொற்களின் பகிர்வாகக் கழிந்தவையும் இவரின் மனதில் பெரும் சலனத்தையும், தாக்கத்தையும் உருவாக்கி ஆழமான, நுட்பமான கவிதைகளாக மாறி காலத்தின் சாட்சியாக முன் நிற்கின்றன. தனிமையை, எதிர்பாராத வேளையில் ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொண்ட சமூகத்தின் பல்வேறு வகைத் தவிப்புகளையும் சித்தரிக்கும் இக்கவிதைகள் கவனிக்கப்பட வேண்டியவையாகவும் , உரையாட வேண்டியவையாகவும் சிறப்பாகின்றன. இதுவே இந்தத் தொகுப்பின் பெரும் பலம். வாழ்த்துகள்.
- கவிஞர் க. அம்சப்ரியா, தலைவர் - பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பெருந்தொற்றுக்காலங்களில் கள்ளிச் செடியின் கூர்மையான முட்களுக்குள் நைந்து கிடந்த மனித வாழ்வின் துயர்நிறைந்த சாட்சியற்ற பக்கங்களையும்ன் அதிகார வர்க்கம் நிகழ்த்திய கீழ்மைகளின் வலிகளையும் தன் கவிதைகளில் ஒரு கோட்டோவியம் போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர் இரா.பூபாலன், மக்களின் வாழ்வியலை எழுத வருபவர்களுக்கு இவர் கவிதையை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு மக்களின் கண்ணீரை மொழிபெயர்த்து , தான் மக்கள் கவிஞர் என பிரகடனப் படுத்தியுள்ளார். வாழ்த்துகள்.
- கவிஞர் சோலைமாயவன்
Be the first to rate this book.