தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எஸ்.ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர், புனைகதை எழுத்தாளர். கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி, பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர். மொத்தத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதுபோல ஓர் இலக்கிய யோகி என்கிற அளவிற்கு வாய்த்த வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர். சொந்த வாழ்விலும் இலக்கியப் படைப்பிலும் சோதனை முறையைப் பின்பற்றுவதையே தன் நெறிமுறையாகக் கொண்டவர். பாலம், குயுக்தம், வெசாஎ-என்று தொடர்ந்து பல்வேறு இதழ் நடத்தும் முயற்சிகளிலும், கதை சொல்லிகள். சும்மா இலக்கியக் கும்பல் முதலிய இலக்கிய அமைப்புக்களை நடத்தும் செயல்பாடுகளிலும் எழுத்தாளர்களை ஊர் ஊராகத் தேடி அடைந்து உரையாடுவதிலும் தன் பொன்னான காலத்தையும் முன்னோர் தேடித்தந்த பொருளையும் செலவழித்து ஓய்ந்த ப்ரகாஷ் 2000 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் தன் 57-வது வயதில் பயணத்தை முடித்துக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்பொழுது அவர் எழுத்துக்கள் புதிய இளைஞர்களால் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன என்ற உண்மை. அவர் எழுத்தின் தீவிரத்தை உணர்த்திக்கொண்டிருக்கின்றது. இராசபாளையம் வட்டம், புத்தூரில் பிறந்து வளர்ந்த பேராசிரியர், முனைவர் க.பகுசாங்கம் (1949) புதுச்சேரி அரசு கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் முப்பத்தி எட்டு ஆண்டுகள் பணிபுரிந்து 2011-இல் பணிநிறைவு பெற்றார். கவிதை, நாவல், திறனாய்வு. மொழிபெயர்ப்பு என்று ஐம்பத்திரண்டு நூல்கள் எழுதியுள்ளார். திறனாய்வுப் புலமைக்காகக் கணையாழி இதழ் வழங்கிய பேரா.சிவத்தம்பி விருது, மேலும் இதழ் சிவசு விருது, அமெரிக்கா வாழ் தமிழர்கள் வழங்கும் விளக்கு விருது. புதுவை அரசு கம்பன் புகழ் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (2003-2008) பணியாற்றியுள்ளார். புதுச்சேரி பாரதி அன்பர்கள் அறக்கட்டளையின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
Be the first to rate this book.