மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும். அப்படியான படிமங்களில் கவரப்பட்டு மனமொன்றிப்போகிற பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நிராயுதபாணியாகவும், தேம்புதல்களினூடாகவும், பேராசைகளற்ற எளிய எதிர்பார்ப்புகளின் மீதான நிச்சமின்மையையும், அதன் பொருட்டெழுகிற பயங்கள், சந்தோஷங்கள், இயற்கையின் கொண்டாட்டங்களில் சுய இயல்பு நிலைகளைப் பொருத்தி வெளியாற்றும் பலவும் இக் கவிதைகளில் உணர முடிகிறது. வழமையான நவீன பெண் கவிஞர்களின் விரிவு வேலியிருந்து விலகி வேறொரு தளத்தில், பிறழ்வு நிலை சந்தோஷச் சித்திரங்கள், நனவு நிலைத் துயரங்கள், வருத்தம் தோய்ந்த தொய்வற்ற சுய சம்பாஷணைகள் எனத் தனது கவிதையாடலை பரமேசுவரி நிகழ்த்தியிருக்கிறார். எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி என்ற முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின்னர், ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக வாசிப்பின் ஊடாட்டத்தில் உள்ளுக்குள் ஒரு ரசவாதத்தை நிகழ்த்துகிற கவிதைகளை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்பான ‘தனியன்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக தனித்துவமான முன்னகர்த்துதலைச் செய்திருக்கிறார் பரமேசுவரி.
- பொன். வாசுதேவன்
Be the first to rate this book.