நம் நாட்டில் பல ஆன்மிகப் பெரியோர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமது வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். இத்தகு ஆன்மிகப் பெரியோர்களின் வரிசையில் முக்கியமானவர் வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார்.
இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்ட இவரது ஆன்மிகக் கொள்கை அக்காலத்தில் நிலவி வந்த பல சமயக் கொள்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தியது. சாதியின் பெயராலும் இனத்தின் பெயராலும் குறிப்பிட்ட மக்களை ஒதுக்கி வைத்த சமயங்களை இவர் கடுமையாகச் சாடினார். அதன் காரணமாக ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்ற மார்க்கத்தை உருவாக்கி அனைவரும் தனக்குப் பொதுவானவர்கள் என்ற கொள்கையை நிறுவினார்.
அனைவரும் தரிசிக்கும் வகையில் கடவுளை ஜோதி வடிவில் வழிபட்டார். ‘மக்கள் சேவையே கடவுள் சேவை’ என்பதை முக்கியக் கொள்கையாக வகுத்து, பசித்த மக்களுக்கு உணவு அளிப்பதையே கடமையாகக் கொண்டு வடலூரில் இலவசமாக உணவளிக்கும் வகையில் அணையாத அடுப்பினை ஏற்படுத்தினார். அது இன்றளவும் மக்களின் பசியைப் போக்கி வருகிறது.
பக்தர்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்லாது அறிவுப்பசியை போக்குவதற்கும் அவர்களின் வாழ்க்கை நல்வழியில் செல்வதற்கும் முக்கியப் பாதையைக் காட்டும் ‘திருவருட்பா’ எனும் நூலை நமக்கு அளித்துள்ளார். இப்புத்தகம் வள்ளலாரின் வாழ்க்கையையும், ஆன்மிகப் பயணத்தையும், இவர் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டில் மக்களுக்கு ஏற்பட்ட ஆன்மிகச் சிக்கல்களையும் கலாசாரக் குழப்பங்களையும் தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
ப.சரவணன் இப்புத்தகத்தில் தனது லாகவமான எழுத்தின் மூலம் இராமலிங்க அடிகளாரின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.
Be the first to rate this book.