பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், இடங்கள், சம்பவங்களே இக்கதைகளிலும் காணக் கிடைக்கின்றன. எந்தவிதமான அலட்டலுமற்ற இயல்பான நடை ஒவ்வொரு கதைக்கும் உயிர்ப்பைத் தந்திருக்கிறது. நூலுக்குத் தலைப்பு கொடுத்த 'தனிமையில் ஒரு கோயில்' சிறுகதையில் குல தெய்வ வழிபாட்டுக்காக கோயிலுக்குச் செல்லும் ஒருவர் பஸ் கண்டக்டர் தர வேண்டிய மீதிச் சில்லறையைத் தராததால் கோபமடைகிறார். கோயிலில் வழிபாடு செய்வதற்குத் தேவையான எலுமிச்சம் பழங்களை வாங்காததால், அவற்றைப் பக்கத்துத் தோட்டத்தில் பறித்துத் தந்த சிறுவனுக்கு சன்மானமாக ஐந்து ரூபாயைத் தருகிறார். அந்தச் சிறுவன், அதை கோயில் உண்டியலில் போடுகிறான். அந்தச் சிறுவன் பஸ்ஸில் தன்னை ஏமாற்றிய கண்டக்டரின் மகன் என்பதும், கண்டக்டர் அந்தச் சிறுவனின் தாயை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணமுடித்திருப்பதும் தெரிய வருகிறது. 'குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்வது' என்ற மையமான பொருளைச் சுற்றியே கதை சூழலாமல் புதியமுறையில் கதை சொல்வது நிகழ்கிறது.
'உண்மைகள் சுடுவதுண்டு' சிறுகதையில் வரும் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர், இந்நாட்டு மக்களின் மனதில் ஊன்றப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான வெறுப்பு விதைகளை, தனது பேச்சால் அழிப்பதோடு, மாற்று வழிகளையும், இன்றைய நிலைமைகளையும் சுட்டிக்காட்டுகிறார். வித்தியாசமான கருப்பொருள்களும், இயல்பான சித்திரிப்பும் இந்நூலை குறிப்பிடத் தக்கதாக்குகின்றன.
Be the first to rate this book.