பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள் பலர் இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சியில் அமைந்த தொகுப்பு இது. ஓர் ஆலமரமாய் விழுதுகளை பூமிமேல் தழையவிட்டவர் சூடாமணி. பலருக்கு நிழல் தந்தவர். தன் கிளைகளில் கூடு கட்டிக்கொள்ள இடம் தந்தவர். அந்த ஆழ்ந்த வாஞ்சையும், மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கும். எந்தக் கதையை யார் திறந்தாலும் அந்த உணர்வுகள் அவர்களை எட்டும். இக்கதைகளில் உள்ள அவருக்கே உரித்தான அந்த உணர்வுகள் அனைவரை யும் தொடட்டும். தொட்டு வளர்த்தட்டும். இருத்தட்டும்.
Be the first to rate this book.