அன்னி எர்னோவின் படைப்புகள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைப் பெண்ணியக் கருத்துகள், வரலாற்றுச் செய்திகள், சமூகச் சிந்தனைகள் போன்ற வெவ்வேறு கோணங்களில் அணுகலாம். இந்த நூலில் சமூக ஏற்றத் தாழ்வுகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரான்சின் வட மேற்கு மாகாணமான நார்மண்டியில், விவசாயப் பண்ணைகளில் வேலைசெய்பவர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட குடும்பம் ஒன்றில் பிறந்த அன்னி எர்னோவின் தந்தை சமூகத்தில் சற்று ‘மேலான’ இடத்தைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இருந்தும், அவரால் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. தந்தையால் நிகழ்த்த இயலாத சாதனையை நிகழ்த்திக்காட்ட மகள் உறுதிபூணுகிறாள். அவளுடைய முயற்சி என்ன ஆனது என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. தன்வரலாறுபோலத் தோன்றினாலும், இக்கதையில் வெளிப்படும் அன்னி எர்னோவின் ஆழ்ந்த சமூகவியல் பார்வை சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. 1983ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலுக்கு வெளிவந்த அடுத்த ஆண்டே பிரான்சின் உயர் இலக்கிய விருதுகளில் ஒன்றான ரெனோதோ விருது (Prix Renaudot) வழங்கப்பட்டது.
Be the first to rate this book.