“ஏழையின் குடிசையில் அடுப்பும், விளக்கும் தவிர எல்லாம் எரிகின்றது” என்ற வல்லிக்கண்ணனின் புதுக்கவிதையைக் கொண்டு ஏழ்மையை விளக்கும் உத்தி “அடேங்கப்பா”. தொப்பையை இறைவன் கொடுத்த பரிசாய்க் காணும் எள்ளல்தனம் “பேஷ்…பேஷ்”. புரியாத வார்த்தைகளையும், நம்பகத்தன்மை இல்லாத நிகழ்வுகளை, சினிமாத்தனமான திருப்பங்களையும், தேவையற்ற விகார வெளிப்பாட்டையும், மேதாவித்தனமான வியாக்கியங்களையும் தூக்கிப் பரண் மேல் முடக்கி விட்டு, மானுடத்தின் பரிபூரண விடுதலைதான் என் இலக்கென இடி முழக்கமிட்டு, யதார்த்தத்தின் எல்லைக்கு அப்பால் செல்லாமல், உண்மை மற்றும் உணர்வுகளின் உள் வட்டத்திற்குள் அழகு கோலமிட்டு அதில் வாசகனைக் கொண்டு வந்து அமர வைத்துள்ளார் கதாசிரியர். சோகமும், துக்கமும் பறித்துக் கொண்ட கதையின் முதன்மைப் பாத்திரமான முத்துவின் வாழ்க்கையை மீட்டு தன்னம்பிக்கையின் கைகளில் ஒப்படைத்த ஆசிரியரின் மானுட நேயம் “அருமை”. வழிவழியாக வந்து கொண்டிருக்கும் பொற்சுழிப்புகளோடு, ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆளுமைப்படுத்திய ஆசிரியரின் சொற்பதம் “அற்புதம்”. மண்ணின் மணம் என்னும் மகோன்னதத்தை தீப்பொறியாய்க் காட்டாமல், தீபமாய் ஒளிரச் செய்துள்ளார் கதை ஆசிரியர். சூரியனின் வீரியத்திற்கு அறிமுகமெதற்கு?...வாயுவிற்கு எதற்கு வழிகாட்டி?...நதிக்கு ஏன் வேண்டும் நடை வண்டி?...இக்கதை படைத்த கதாசிரியருக்கு தூண்டுகோல் எதற்கு வேண்டும்?...நெம்புகோலாய் அவர் கையில் உள்ளது ஒப்பனைகளை ஒதுக்கி விட்டு சுயரூபத்தோடு எழுதும் எழுதுகோல். சுயதம்பட்டக்காரனால் தூக்கி நிறுத்த முடியாத இலக்கிய உலகத்தை உன் போல் மண்ணின் மைந்தனால் மட்டுமே உயர்த்த முடியும்.
Be the first to rate this book.