கதைகளின் காலக் கடிகாரம் வேறு; வாழ்வின் காலக் கடிகாரம் வேறு. வாழ்வை அது கடந்துபோன பின்பு ஒரு கதையாக நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு நினைத்துக் கொள்ளப்படும்போதே வாழ்வு வேறொரு காலத்துக்குள் புகுந்துவிடுகிறது. அதன் வேகமும் சுழிப்புகளும் செயற்கைத் தன்மையை அடைந்து விடுகின்றன. எவ்வளவு நன்றாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அது பாடம்செய்யப்பட்ட பறவையைத் தொட்டுணரும் உணர்வைக் கொஞ்சமாவது தரத் தவறுவதில்லை. சா. கந்தசாமியின் இந்தக் கதைகள் இந்த மரமரப்பைத் தங்களது நிதானமான மொழிநடையால் அனாயசமாகத் தாண்டிவிடுகின்றன. இந்தக் கதைகள் செயற்கை உச்சங்களை நோக்கித் தலைதெறிக்க ஓடுவதில்லை. தேவைக்கதிகமாக ஓரிடத்தில் கயம்போல் சுழல்வதில்லை. கதைகளின் காலமே அதன் பாத்திரங்கள் நடத்தும் வாழ்க்கையின் காலமாகவும் வாசிப்பவரை உணரவைப்பது இந்தக் கதைகளின் வெற்றி. இது தமிழ் இலக்கியத்தில் அபூர்வமான ஒன்று.
- போகன் சங்கர்
Be the first to rate this book.