சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு,தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை இங்குத் தழைத்தொங்கி வளர்ந்துள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பயிரைப் பாங்குறச் செழித்தோங்க வளர்த்தனர். திருமூலர், பட்டினத்தார் போன்ற ஞானாசிரியிர்கள் ஞானநெறியையும் யோகநெறியையும் வளம்பெறச் செய்தனர். ஆகவே, பக்தி, ஞானம், யோகம் என்னும் மூன்று நெறிகளுலும் தமிழ்நாடு சிறப்புடன் இலங்கி வருகின்றது. இம்மூறையும் ஒருங்கே தம்முட்கொண்டு வாழ்ந்த அருள்நெறிக் காவலர்களுள் தாயுமானவர் தலையாய தவப்புதல்வர் ஆவார். பிறப்பு, இறப்பு என்னும் வட்டச் சுழற்சியை ஒழிக்கும் வழியை இவர் நவில்கின்றார். இதுவே முக்திக்கு இட்டுச் செல்லும் சீரான பாதையாக அமையவல்லது. சந்தமும் இனிமையும் கலந்த அவருடைய செந்தமிழ்ப் பாடல்கள் தமிழின்பமும், வடசொல் நயமும் இழைந்தோடிப் பக்தி, ஞான யோக நெறிகளை நன்கு வகுத்துக் காட்டுகின்றன. இவரது கனிவுமிக்க பாடல்கள், படித்தாலும், அருகில் நின்று கேட்டாலும், நினைத்தாலும் பேரின்பம் பயக்கும் தன்மையன.
Be the first to rate this book.