ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் வாயிலாக, தமிழ்ப் புலவர்களும் ஆன்றோரும் சான்றோரும் சொல்லிச் சென்ற அறநெறி கருத்துகள் இன்றும் நம் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. இதற்கு ஆகப்பொறுத்தமான எடுத்துக்காட்டாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டடி திருக்குறளைச் சொல்லலாம்.
உலகின் மற்ற மனித மரபுகளில் அடிப்படை அறிவு தோன்றாதபோதே, அறம் சார்ந்த வாழ்விலும் அறிவியல் சார்ந்த புரிதல்களிலும் தழைத்தோங்கி வாழ்ந்த இனம் தமிழினம். ஆத்திசூடியும் மணிமேகலையும் நாலடியாரும் சொல்லும் அறச்சொற்கள் அனைத்தும், இன்றைய மனித வாழ்வியலோடு எப்படியெல்லாம் ஒத்திசைந்து வருகின்றன என்பதை எளிய நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் அருணன். உதாரணமாக ஒரு திரைப்படத்தில் ஒருவனை தாராளமாக உதவி கேட்கச்சொல்லிவிட்டு, கடைசியில் `உனக்கு உதவும் நிலையில் நான் இல்லை' என்று நடிகர் வடிவேல் சொல்வாரே, இப்படிப்பட்ட குணத்தைப் பற்றி சங்கப் பாடல் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளதாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
இப்படி சங்க இலக்கியப் பாடல்களின் கருத்துகள் பலவும் இன்றைய காலகட்டத்துக்கும் எப்படியெல்லாம் பொருந்தி வருகின்றன என்பதை ஆய்வு நோக்கில் சொல்கிறது இந்த நூல். இதனால் இந்த நூல் திறனாய்வு மாணவர்களுக்கும் உதவும். தமிழர் சொன்ன வாழ்வியல் அறநெறிகளை அறிவோம் வாருங்கள்.
Be the first to rate this book.