காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற்றுக்கொண்டார். அவரின் ஐந்து ஆண்டுகால முயற்சியில் உருவானது இந்நூல்.
தமிழகச் சமையல் முறைகளுடன் ஈழம், புலம்பெயர் உணவு முறைகளும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளிகள், ஆய்வாளர்கள் பலரும் நுட்பமான பார்வையுடன் தமிழர் உணவின் பல்வேறு பரிமாணங்களை அணுகியிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கென தனித்துவமான உணவு முறைகளும் உணவு விலக்குகளும் உண்டு. ஏனைய பண்பாடுகளுடன் உறவாடி, கொண்டு கொடுத்தல் செய்து பலவகை தானியங்கள், பயிர்வகைகள், காய்கறிவகைகள் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளன. இந்த தனித்துவமும் பொதுத்தன்மையும் கொண்ட மரபு உலகமயமாக்கலினால் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உணவு, உணவு முறை, உணவுப் பண்பாடு குறுகிய காலத்தில் பலத்த மாற்றத்திற்கு ஆட்பட்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் பல சுவாரசியமான தகவல்கள், உணவு வகைகள், பண்பாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் தனி முக்கியத்துவம் பெறுகிறது.
Be the first to rate this book.