தாழ் மனப்போக்கால் தமிழினம் இழந்தது ஏராளம். தற்காலத் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பண்பாட்டுச் சீரழிவுகளும் வரலாற்றுப் பிழைகளும் ஏராளம். மொழி உணர்வும் இன உணர்வும் மங்கி வருகின்ற இச்சூழலில் வெளி வந்திருக்கும் இந்நூல் இன்றைய கால கட்டத்தின் அவசியத் தேவையாகும். இன்றைய இளைஞர்கள் வரலாற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. காரணம் அவை நமக்குச் சோறு போடாது; பயனளிக்காது என்று எண்ணுகின்றனர். இந்த அறியாமைப் போக்கே தமிழினத்தின் இறக்கத்திற்கும் அழிவுக்கும் கரணியம் என்பதை உணர இயலாத நிலையில் உள்ளனர்.
தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்ற நூலில் பின்புலம், காரணங்கள், தீர்வுகள் என மூன்று பகுதிகளாக பல வரலாற்றுச் செய்திகளும் கருத்தாழமிக்கத் தொலைநோக்குச் சிந்தனைகளும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. பிற இனங்களின் வரலாறு, வளர்ச்சி ஆகியவற்றை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் மீது நடைபெற்ற படையெடுப்புகள், பண்பாட்டுச் சிதைவுகள் பலவற்றை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்துக் காட்டியிருப்பது மிகவும் அருமையாக உள்ளது. இன்றையச் சமுகம் இதை படிப்பதன் மூலம் கண்டிப்பாகப் பயன்பெறும் என்பதில் அய்யமில்லை. இன்று தமிழரிடையே காணப்படும் ஒற்றுமையின்மை, ஏழ்மை போன்றவற்றிற்கான காரணங்களும் தீர்வுகளும் இங்கு தெளிவாகவேத் தென்படுகின்றன. மறுமலர்ச்சி காண விரும்பும் ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஓர் அரிய நூல் இது.
Be the first to rate this book.