தமிழ்நாட்டில் சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பு மாநிலமெங்கும் கிளைகளை அமைத்தும், தொலைநிலைக் கல்வி வழியாகவும் சமஸ்கிருத மொழியைக் கற்றுத்தருகிறது. அதுதவிர சென்னை எழும்பூரில் உள்ள சுரா பாரதி, சமஸ்கிருத கல்விக் கழகம் உள்ளிட்ட இன்னபிற அமைப்புகளும் உள்ளன. சென்னையைத் தவிர மதுரை, திருச்சி, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் முதலான ஊர்களிலும் சமஸ்கிருத ஆய்வு மையங்கள் இருக்கின்றன. தஞ்சாவூரிலிருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம்; சேலம் பெரியார் பல்கலைக் கழகம், நெல்லையில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் சமஸ்கிருதப் பாடப் பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் இருக்கும் அரசு பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள் பலவற்றில் சமஸ்கிருத ஆய்வுகள் நடந்துவருகின்றன. சென்னைப் பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, திருவையாறில் அமைந்திருக்கும் அரசர் கல்லூரி முதலியவற்றில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு 300 மையங்களில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முறையான கல்வி நிறுவனங்கள் தவிர பாரம்பரிய முறையில் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. வேத பாடசாலைகள், சமஸ்கிருத கலாசாலைகள், ஓரியண்டல் பள்ளிகள் முதலானவையும் சமஸ்கிருதம் போதிப்பதில் ஈடுபட்டுள்ளன. இவைதவிர மயிலாப்பூரில் இருக்கும் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையம், திருவான்மியூரில் இருக்கும் சத்ய நிலையம், அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் ஆகியவற்றிலும் சமஸ்கிருத ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக இப்படி பா.ஜ.க அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் அதற்கென்றே பல அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்துக்கென ஒரே நாளில் நான்கு மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் சமஸ்கிருதப் பற்றாளர்களால் தமிழுக்கு எதிரான பரப்புரையும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழின் தொன்மையை நிலைநாட்டவும், சமஸ்கிருதப் படையெடுப்பைத் தடுக்கவும் நாம் செய்யவேண்டியவை எவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
Be the first to rate this book.