தமிழ்நாட்டு வரலாறு முறையாக எழுதத் தொடங்கியவர்கள் கிறித்துவ சமயப்பணியாளர்களும், காலனிய அரசு அலுவலர்களுமே ஆவர். அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு எழுதப்பட்ட வரலாற்று எழுத்துகளில் ஒருதலை சார்பு - அதாவது, தம் நாகரிகமும் பண்பாடும் மேலானவை, தம் ஆட்சிக்குட்பட்ட நாகரிகமும், பண்பாடும் கீழானவை அல்லது அத்துணை உயர்வானவையல்ல என்ற கருதுகோளையே கொண்டிருந்தனர்.
காலனிய ஆட்சியின் கீழ்தான் நவீனத்துவம் தமிழர்களை வந்தடைந்தது. தமிழர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களாகவே எழுதத் தொடங்கினர். கடந்த இருநூற்றாண்டுகளாக வெளிவந்துள்ள தமிழ்நாட்டு வரலாற்று எழுத்துகளில், தமிழ்நாட்டின் அரசியல் போக்குகள் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ளன. அவற்றுள் முதன்மையானவை திராவிட நோக்கும், இந்திய தேசிய நோக்குமே. இவற்றுள் பேரா அ. இராமசாமி எழுதியுள்ள தமிழ்நாட்டு வரலாறு திராவிட நோக்கை அடிநாதமாகக் கொண்டுள்ளது.பேரா அ. இராமசாமி பல்வேறு வரலாற்று அறிஞர்களின் கூற்றுகளை எடுத்துக்காட்டி, அவற்றை ஏற்றும், மறுத்தும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றார். தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்றுக்கொள்ள விழையும் மாணவர்க்ளுக்கு இந்நூல் அவசியம் தேவைப்படும்.
Be the first to rate this book.