எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக, தமிழ்பாஷை தெரிந்தவர்கள் ஏளனம் பண்ணக்கூடிய வகையில் “சேவை” செய்துவருகிறதினாலே, எனக்கு சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு என்றாலே சற்று பயம். வெறுப்பும் கூட வுண்டு. இந்த நிலையில் ஸ்ரீ ஏ.எஸ்.ஏ. சாமியின் ‘பில்ஹணன்’ மூலத்தினின்றும் வேறுபட்டதா, சொந்த மனோதர்மமா, அப்படியானால் மூலத்தைவிட உயர்வான கனவா என்று சொல்லக்கூடாத வகையிலிருக்கிறேன். நான் பில்ஹணன் கதை பற்றி அறிந்ததெல்லாம், அதனுடன் ஒட்டி, கம்பனுக்குப் பிள்ளை கற்பிக்கும் முயற்சியில் எழுந்த அந்த அம்பிகாபதியின் கனவுதான்... அதன் பிறகு நந்தலால் வசுவின் கோட்டுச் சித்திரங்களை நினைவூட்டுவது போலெழுந்த, என் நண்பர் ஸ்ரீ ந. பிச்சமூர்த்தியின் பில்ஹணன், அமரர் கு.ப.ரா. எழுதிய 'திரைக்குப் பின்' என்ற பில்ஹண்ய கதை. பிறகு படிக்கும் ஒவ்வொரு வரியும் பாரதீய பண்பை இன்றும் நினைவூட்டிவரும் கவிஞர் பாரதிதாஸனுடைய 'புரட்சிக்கவி'.... ‘பில்ஹணீயம்' பாரத சமுதாயத்தின் பொதுச் சொத்து. கம்பன், வான்மீகனது கனவை எடுத்தாண்டது போல, கவிஞனுக்குரிய பூர்ண உரிமையுடன் பாரதிதாஸன் அதை மீண்டும் வனைந்திருக்கிறார்.
- புதுமைப்பித்தன்
Be the first to rate this book.