ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் அதற்கான நீதி கிடைக்கவில்லை. இனப்பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. யுத்தத்தின் போது இறுதியாகச் சிறைபிடிக்கப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்பதை இதுவரை இலங்கை அரசு தெரிவிக்கவில்லை. காணாமல் போனவர்கள் எல்லோருமே இறந்து போயிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஈழத் தமிழர்கள் தம் அடுத்தக்கட்ட பணிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற குரல்கள் கூட முன்புபோல வலுவாக இப்போது எழுவது இல்லை. இந்தச் சூழலில் ஈழம் குறித்த அக்கறையைப் புதுப்பிக்கும் நோக்கத்தோடு 2009இல் முதலில் வெளியான இந்த நூலை மீள் பதிப்புச் செய்கிறேன். ஏ9 பாதை மூடப்பட்டதிலிருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறியது வரை தொடர்ந்து ஈழ யுத்தம் குறித்து நான் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
யுத்தம் முடிந்தவுடன் ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்காக ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளாமல் மற்றவர்கள்மேல் பழி போடுவதிலேயே தமிழ்நாட்டில் பெரும்பாலோர் கவனம் செலுத்தி வந்தனர். அதனால் ஈழப்பிரச்சனையைப் பற்றிய காத்திரமான விவாதம் எதுவும் தமிழ்ச்சூழலில் நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போதாவது காய்தல் உவத்தலின்றி ஈழப் பிரச்சனையை இங்கு விவாதிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது எனக் கருதுகிறேன்.
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தால் பலனடைந்த மக்களும் இப்போது அதிகாரத்துவ ஆட்சியின் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர். ராஜபக்சக்களின் கோர முகம் இன்று அவர்களிடையேயும் அம்பலமாகியிருக்கிறது. இலங்கையின் அதிகாரத்துவ அரசுக்கு எதிராக இப்போது சிங்கள மக்களோடு தமிழ் மக்களும் கைகோர்த்துள்ளனர். ஈழத்தமிழர் சிக்கலை நடுநிலையோடு ஆராயவும், இனப்படுகொலைக்கான நீதியைப்பெறவும் இந்த இணக்கமான சூழல் வழிகோலவேண்டும்.
– ரவிக்குமார்
Be the first to rate this book.