சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
தமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் கண்டு தெளியவும்; வடிவ மரபைப் போற்றி வளர்க்கவும் யாப்பியல் தொடர்பான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. வடிவ மரபோடு மட்டுமன்றி, இலக்கணங்களின் காலம், பாடபேதம் முதலிய பிறவற்றிலும் யாப்பியலின் தொடர்ச்சியைக் காண முடிகிறது. இதனால் காலந்தோறும் யாப்பியல் தொடர்பான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்வதன் மூலம் இலக்கிய வடிவ மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும், அத்தகைய பயன்களைக் கருத்தில் கொண்டே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் நூலிலுள்ள கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன.
யாப்பியல் மரபுகள் எவையெவை, தொல்காப்பியச் செய்யுளியலின் பாவியல் கோட்பாடு, வண்ணக் கோட்பாடு, வெண்பாவின் ஈற்றுச் சீரும், ஈற்றயற்சீரும், யாப்பு உறுப்பான "கூன்' பற்றிய விளக்கம், பத்துப்பாட்டில் யாப்பு பயின்றுவந்துள்ள விதம், குருமகுருபரரின் யாப்பியல் புலமை, எஸ். வையாபுரிப்பிள்ளையின் யாப்பியல் சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் யாப்பியல் தொடர்பான பன்முகத் தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றன.
Be the first to rate this book.