கூத்து ‘வழி’ நாடகவாக்க அனுபவத்தை நான் முதன்முதலில் பார்த்தது இராமசுவாமியின் ஆற்றுகையின்போதுதான்! அந்தச் சிலிர்ப்பிலிருந்தும் ஆச்சர்யத்திலிருந்தும் உண்மையில் நான் இன்னும் விடுபடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ‘நோஃக்’ (Noh), ‘கபூகி’ (Kabuki) அரங்கு அளிக்கைகளை முதன்முதலில் பார்த்தபொழுது ஏற்பட்ட கலைத்துவ அதிர்ச்சியை ஒத்ததாகவே இருந்தது. இராமசுவாமி என்ன பேசிக்கொண்டு வந்தார் என்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால், திரண்ட ஆஜானுபாகுவாகிய அவர் கச்சைக் கட்டுடன் முன்வந்து தனது பாகத்தைக் கூறியபொழுது, கூத்து எந்த அளவிற்கு ஓர் ஆற்றுகை மரபாக (நிகழ்த்துகை மரபாக) ஆகியிருந்தது என்பது தெரிந்தது. இந்த ஆற்றுகை - நிகழ்த்துகையில் நடிப்பே பிரதானப்பட்டு நின்றது. இலங்கையில் கூத்து மீட்பின்பொழுது அதனுடைய ஆட்ட ஒருங்கியைபிற்கு முக்கியத்துவம் கொடுப்பதே தவிர்க்கமுடியாத நியதியாக இருந்தது. ஆனால் இராமசுவாமி என்கிற கலைஞன், தன் ஆற்றுகையில், அந்த ஆட்டம் சித்திரிக்கும் நடிப்பு நிலைபாவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமை காரணமாகவே மேற்கூறிய சாதனையை ஈட்டிக் கொள்ள முடிந்தது என்று எண்ணுகிறேன்.
- கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி
Be the first to rate this book.